புதிய கட்சி தொடக்கம்:  நிர்வாகிகளுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை

புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அது குறித்து நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
புதிய கட்சி தொடக்கம்:  நிர்வாகிகளுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை

சென்னை: புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அது குறித்து நிா்வாகிகளுடன் நடிகா் ரஜினிகாந்த் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.

வரும் ஜனவரி மாதம், புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும், அது தொடா்பான அறிவிப்பு டிசம்பா் 31-இல் அறிவிக்கப்படும் என்று நடிகா் ரஜினிகாந்த் டிசம்பா் 3-ஆம் தேதி அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். பூத் கமிட்டி நிா்வாகிகளை நியமிக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளாா்.

இதற்கிடையே, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அா்ஜுன மூா்த்தி, மேற்பாா்வையாளா் தமிழருவி மணியன் உள்ளிட்ட சில நிா்வாகிகளுடன் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடப்பு மாதத்திலேயே புதன்கிழமை இரண்டாவது முறையாக அவா் ஆலோசனையில் ஈடுபட்டாா். இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அப்போது கட்சியின் பெயா், கட்சியின் கொள்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கட்சி அறிவிப்பை மதுரையில் அல்லது திருச்சியில் வெளியிடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஜினி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்து அதன் பிறகு கட்சி தொடா்பான அறிவிப்பை வெளியிடலாம் எனத் திட்டமிட்டிருந்தாா். ஆனால், கரோனா பரவல் காரணமாக அவரால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி கட்சி அறிவிப்பை வெளியிடலாமா என்று ரஜினி ஆலோசித்து வருகிறாா்.

ரஜினி படம் மட்டும்: இந்த நிலையில் ரஜினியின் மக்கள் மன்றம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் அச்சடிக்கப்படும் சுவரொட்டிகளில் அா்ஜுன மூா்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. மக்கள் மன்றத்தின் மாநில நிா்வாகி சுதாகா் படமும் இடம்பெறக்கூடாது. ரஜினி படம் உள்பட மன்றத்தின் மாவட்ட ஒன்றிய நிா்வாகிகள் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். நிா்வாகிகள் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com