பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னுதாரணம்: துணை முதல்வர்

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னுதாரணம்: துணை முதல்வர்

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா கருத்தரங்கு கூடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைவதற்கான பன்னாட்டு தின தொடர்பான கருத்தரங்கு நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அதில், பெண்களின் முன்னேற்றமே சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து, ஜெயலலிதா, பெண்களின் வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும் எண்ணிலா முன்னேற்ற திட்டங்களைத் தீட்டிச், செயல்படுத்தியதின் பயனாக, தமிழகம் கடந்த 10 வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதில், நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவிபேணி வளர்த்திடும் ஈசன்” என்று பெண்ணின் பெருமையைப் புகழ்ந்து பாடிய மகாகவி பாரதி.,

“மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”
என்று யதார்த்த நிலையை எடுத்துக் காட்டினார்.
மகாகவி பாரதி கூறியதைப் போல, மிதமிஞ்சிய ஆணாதிக்க மூட சிந்தனைகளாலும், பெண்களை அடிமை நிலையிலேயே வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கின்ற பழமை வாதிகளின் குறுகிய எண்ணங்களாலும் தான் நாட்டிலே பெண்களுக்கு எதிராக வன்முறைகளும், குற்றங்களும் உருவாகின்றன.

பெண்களது திறமைக்கு உரிய இடமளித்து அவர்களை உயர்த்திவிட்டால், தாங்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ, என்று குறுக்கு புத்தி மேலோங்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் பெருகிட காரணமாக அது அமைந்து விடுகின்றது.

பெண்கள் சமுதாயத்திற்கு எதிரான இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டியதும், அதைச் சீர்ப்படுத்தி பெண்களுக்கு, நீதி பெற்றுத் தர வேண்டியதும் நாகரிக உலகின் கடமை ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைந்து அவற்றை முற்றிலும் ஒழித்திடத் தேவையான கொள்கைப் பரப்புதலை அதிகரிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த, நிலையான வளர்ச்சி இலக்குகள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை ஒழித்து அவர்களது நல்வாழ்வை உறுதிப்படுத்த, வலியுறுத்துகிறது.

இதன் அடிப்படையில், மகளிர் ஐக்கிய நாடுகள் அமைப்பானது, பாலின பாகுபாடு சார்ந்த வன்முறைகளை களைவதற்காக அவசர கால நடவடிக்கைகள், நிதி ஒதுக்கம், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை எதிர்கொள்ளல், அவை நிகழாது தடுத்தல் மற்றும் வன்முறை குறித்த தகவல் சேகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கி, புது உலகம் படைத்திடும் நோக்கத்துடன்,

கரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவைச் சீரமைத்து, பாலின சமத்துவத்தை எய்துவதற்குரிய வழிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுத்திட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாக ஒழிப்புக்கான பன்னாட்டு தினம் கொண்டாடவும், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள் நடத்திடவும், அதன் வழி நடந்திடவும் திட்டமிட்டுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், முக்கிய துறைகளான உள்துறை, சமூக நலன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் இந்திய பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து, ஆறு நாட்களுக்கு மிகச்சிறப்பாக கருத்தரங்குத் தொடர் ஏற்பாடு செய்து, நிறைவாக இன்றைய நிகழ்ச்சியை நடத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com