விடை பெறுகிறதா இரு துருவ அரசியல்?

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
விடை பெறுகிறதா இரு துருவ அரசியல்?

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 கால் நூற்றாண்டாக தமிழக அரசியல் களத்தை தங்களைச் சுற்றியே நகர்த்திக் கொண்டிருந்த கருணாநிதி }ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தலை தமிழகம் இன்னும் சில மாதங்களில் சந்திக்க இருக்கிறது. இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், களத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் உருவாகியுள்ளன.
 அதிமுக-திமுக என இரு துருவ அரசியல் தொடருமா அல்லது பலமுனைப் போட்டி கொண்ட அரசியல் களமாக தமிழகம் மாறுமா என்பதற்கு விடை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைக்கும்.
 தமிழக தேர்தல் களத்தைப் பொருத்தவரை, சுதந்திரத்துக்குப் பிறகு தலைவர்களை மையமாக வைத்துதான் வாக்குகள் விழுந்துள்ளன. கடந்த 1957 முதல் 1971 வரை நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், காமராஜரை மையமாக வைத்து தேர்தல் களம் இருந்ததை உணரலாம். காமராஜர் ஆதரவு வாக்குகள், எதிர்ப்பு வாக்குகள் என்ற அடிப்படையில்தான் வாக்குகள் விழுந்தன.
 இந்த நிலைமை கடந்த 1967-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் முற்றிலும் மாறி கூட்டணிகளின் பங்கு வெற்றி தோல்விக்கு நிர்ணயமாக மாறியது. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை ஓரணியில் திரட்ட ராஜாஜி வகுத்த வியூகத்தின் காரணமாக, கொள்கை முரண்கள் கூட்டணிப் போர்வைக்குள் நுழைந்தன. திமுக, சுதந்திராக் கட்சி, கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் என்று கட்சிக் கூட்டணி உருவாகி, காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக, தனியாட்சி அமைத்தது.
 கடந்த 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த முதல் அரசியல் மாற்றத்தின்போது, எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவுக்கு 30.3 சதவீதம், மு.கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு 24.8 சதவீதம், ஜி.கே.மூப்பனார் தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு 17.5 சதவீதம், பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஜனதா கட்சிக்கு 16.5 சதவீதம் எனத் தனித்தனித் தலைவர்களுக்கான நேர்மறை வாக்குகள் கிடைத்தன.
 தொடர்ந்து, மனவலிமையுடன் களத்தில் நின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார் ஆகியோர் அடுத்த 10 ஆண்டுகள் வரை தங்களது தலைமைக்கு விழுந்த வாக்குகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டனர்.
 ஆனால், தொடர்ந்து களத்தில் நிற்க முடியாத அரசியல் சூழல் காரணமாக, ராமச்சந்திரன் தலைமைக்கு விழுந்த வாக்குகளை ஜனதா கட்சியால் தக்கவைக்க முடியவில்லை.
 எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் தலைவர்களுக்கான நேர்மறை வாக்குகள் விழுந்தன. அப்போது கருணாநிதி தலைமைக்கு 32.5 சதவீதம், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஜெ.அணிக்கு 20.7 சதவீதம், மூப்பனார் தலைமையிலான காங்கிரஸýக்கு 19.8 சதவீதம், ஜானகி தலைமையிலான அதிமுக ஜா.அணிக்கு 9 சதவீத வாக்குகள் கிடைத்தன.
 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களில் நடந்த
 மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்களில், ஒன்றுபட்ட அதிமுகதான் வெற்றி பெற்றது என்பதையும், தொடர்ந்து நடந்த 1989 மக்களவைத் தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
 அதிமுக ஒன்றாக இணைந்த பிறகு ஜெயலலிதா, கருணாநிதி என இரு துருவ அரசியலாகவே தமிழக களம் மாறியது. 2001 சட்டப்பேரவைத் தேர்தல் வரை மூப்பனார் அரசியல் களத்தில் நிர்ணய சக்தியாகத் திகழ்ந்தார். 2006 பேரவைத் தேர்தலில் முதல் முறையாக விஜயகாந்த் களத்துக்கு வந்தபோது கிடைத்த 8 சதவீத வாக்குகளும் நேர்மறை வாக்குகள்தான். இருப்பினும், கருணாநிதி-ஜெயலலிதா என்ற இரு துருவ அரசியல் களமாகவே தமிழகம் தொடர்ந்தது.
 இரு துருவ அரசியலை நகர்த்திய ஆளுமைகள் மறைந்த நிலையில், தமிழக அரசியல் களம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் இதை நன்கு உணர்த்தியது. கூட்டணியின்றிப் போட்டியிட்ட டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக 5.27 சதவீத வாக்குகள், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 3.88 சதவீத வாக்குகள், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான ம.நீ.ம. 3.7 சதவீத வாக்குகள் பெற்றன.
 தமிழக அரசியல் களம் மீண்டும் மூன்றாவது முறையாக மாற்றத்தைக் காண காத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
 எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தலைமைக்கு விழும் வாக்குகளும் நேர்மறை வாக்குகள்தான். யார் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்களோ அவர்களின் தலைமைக்குக் கிடைக்கும் நேர்மறை வாக்குகளாகத்தான் இந்தத் தேர்தலில் விழும் வாக்குகள் கருதப்படும்.
 அந்த வகையில், பிரதான கட்சிகளான அதிமுகவில் எடப்பாடி
 கே.பழனிசாமியும், திமுகவில் மு.க.ஸ்டாலினும் முதல் முறையாக முதல்வர் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். இதேபோல, 4 சதவீத வாக்குகளை நெருங்கியுள்ள சீமான், கமல்ஹாசன் ஆகியோர் மன வலிமையுடன் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்து களமாடத் தொடங்கிவிட்டனர்.
 2019 மக்களவைத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்ற தினகரன், சீமான், கமல்ஹாசன் தலைமைகளுக்கு 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேலும் கணிசமாக வாக்குகள் விழக்கூடும்.
 5 சதவீதத்துக்கு மேல் நிரூபிக்கப்பட்ட வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இதுவரை தங்களது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 முதல்வர் வேட்பாளரை அறிவித்து தனி வழியில் நிற்கப் போகிறார்களா அல்லது தங்களது வாக்கு வலிமையைப் பயன்படுத்தி கூட்டணி பேரத்தில் இறங்குவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது வேறொருவரை நிறுத்துவாரா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.
 கடந்த 2006-இல் விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்த போது 8.4 சதவீத வாக்குகளைப் பெற்றது அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுகவின் வெற்றி, தோல்வியை பல தொகுதிகளில் நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் உருவானார்.
 திமுக கூட்டணி வெற்றி பெற்ற 90 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்குகளின் வித்தியாசத்தைவிட, தேமுதிக வாக்குகள் அதிகம். இதேபோல, அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற 69 தொகுதிகளில் 50 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்குகளைவிட, தேமுதிக வாக்குகள் அதிகம். தேமுதிக பெற்ற வாக்குகளால் 141 தொகுதிகளில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.எனவே, 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் மிகுந்த வலிமையுடன் கோலோச்சும் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் நிற்கும் போது, தேர்தல் களத்தில் மிகப் பெரிய மாற்றம் உருவாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 கருணாநிதி-ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் சக்தி மிக்க நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்திருப்பது திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளின் வாக்குகளில் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தக் கூடும்.
 மக்கள் மாற்று சக்தியாக ரஜினிகாந்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், திமுக, அதிமுக வாக்கு வங்கிகள் மட்டுமல்ல, சீமான், கமல், டிடிவி தினகரன் ஆகியோருக்கு முன்பு கிடைத்த வாக்குகள் ரஜினிகாந்துக்கு மடைமாறக்கூடும்.
 எனவே, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் இரு துருவ அரசியலுக்குப் பதிலாக பலமுனைப் போட்டிக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
 எந்தெந்தத் தலைமைக்கு எத்தனை சதவீத நேர்மறை வாக்குகள் கிடைக்கும் என்பதை 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்திவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com