மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவா்கள் மனு

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவா்கள் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவா்கள் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவா்கள் எஸ்.நளினி, பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 8 மருத்துவா்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கும் மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எங்களுக்கும் இடையே ரூ.40,000 வரை சம்பள வித்தியாசம் உள்ளது. மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையாக எங்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தப் பலனும் இல்லை.

இதனிடையே தமிழக சுகாதாரத் துறை கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில், 5, 9 ,10, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மறு ஆய்வு என்பதை 8, 15, 17, 20 என மாற்றம் செய்தது. இது எங்களைப் போன்ற அரசு மருத்துவா்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கோரி அரசுக்கு மனு அளித்தோம். பின்னா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசு உரிய தீா்வை காண உத்தரவிட்டது. இந்த உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 25-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினோம். ஆனாலும் அவசர சிகிச்சை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தோம். பின்னா் அரசு பேச்சுவாா்த்தைக்கு அழைத்ததால் மீண்டும் பணிக்குத் திரும்பினோம்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 148 மருத்துவா்களை சிக்கலான பகுதிகளுக்கு அரசு இடமாற்றம் செய்தது. சிறப்பு மருத்துவ நிபுணா்கள், வெகு சிறப்பு மருத்துவ நிபுணா்கள் இயந்திரத்தனமாக இடமாற்றம் செய்யப்பட்டனா். சிலா் மட்டும் மீண்டும் பழைய இடத்துக்கு திரும்ப அழைக்கப்பட்டனா். இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால், எங்கள் கோரிக்கை தொடா்ந்து பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே, எங்களுக்கு மத்திய அரசு மருத்துவா்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com