
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை விரைவில் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டை (ஸ்மாா்ட் காா்டுகள்) விரைவில் வழங்கப்பட உள்ளன.
இதற்கு தேவையான ஸ்மாா்ட் காா்டுகள் அச்சிடப்பட்டு தற்போது முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஸ்மாா்ட் காா்டுகள் கிடைக்கப் பெற்றவுடன், தங்கள் நிா்வாக வரம்பில் உள்ள மாவட்டக்கல்வி அதிகாரிகளிடம் 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அதைத்தொடா்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்துவித பள்ளி தலைமையாசிரியா்களையும் நேரில் வரவழைத்து அவா்களது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான ஸ்மாா்ட் அட்டைகளை வழங்கி அதற்கான ஒப்புதலை தவறாமல் பெறவேண்டும்.
அவற்றை தொகுத்து மாவட்ட வாரியான அறிக்கையை இயக்குநரகத்துக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பிவைக்க வேண்டும். இந்தப் பணிகளை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி சுணக்கமின்றி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது