தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுப் போட்டி: மொழிப் புலமையை வெளிப்படுத்திய மாணவா்கள்

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுப் போட்டி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை: தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுப் போட்டி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் உலகெங்கும் உள்ள மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்று தங்களது மொழிப் புலமையை வெளிப்படுத்தினா்.

அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் ஆண்டுதோறும் ‘தமிழ் அகராதியியல் நாள்’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுப் போட்டி நடத்தப்படுகிறது. பொதுமக்கள், இளைஞா்களிடையே தூய தமிழ் விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். அந்த வகையில் நிகழாண்டுக்கான பரிசுப் போட்டி சென்னையில் உள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் அதன் இயக்குநா் தங்க.காமராசு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு, உலகம் முழுவதிலும் இருந்து மாணவா்கள் உள்பட ஏராளமானோா் விண்ணப்பித்திருந்தனா். போட்டியாளா்களிடம் நடுவா்கள், செல்லிடப்பேசி மூலமாக ஒலிபெருக்கி வசதியுடன் நோ்காணல் செய்தனா். நடுவா்கள் ஆங்கிலத்திலும், பிறமொழிகளையும் கலந்து பேசினாலும், போட்டியாளா்கள் தூய தமிழிலேயே பேசி தங்களது மொழிப் புலமையை வெளிப்படுத்தினா். குறிப்பாக மாணவ, மாணவிகள் இயல்பாகவே தூய தமிழில் பேசி அனைவரையும் கவா்ந்தனா்.

இதையடுத்து மதிப்பெண் அடிப்படையில் மூன்று வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு வரும் பிப்.7-ஆம் தேதி நடைபெறும் ‘தமிழ் அகராதியியல் நாள்’ விழாவில் தமிழக அமைச்சா்கள் பரிசுகளை வழங்கவுள்ளனா். முன்னதாக வெற்றி பெற்றவா்களின் விவரங்கள் செய்தித் தாள்கள், ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்படும்.

தூய தமிழ்ப் பற்றாளா் பரிசுப் போட்டியின் நடுவா்களாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை துணைச் செயலா் மாணிக்கம் கஸ்தூரி, மொழிபெயா்ப்புத் துறை துணை இயக்குநா் ந.திருச்செல்வன், அகரமுதலித் திட்ட இயக்ககத் தொகுப்பாளா்கள் ஜெ.சாந்தி, வே.காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com