எரிவாயு உருளை விலை உயர்வு: திமுக மகளிர் அணி சார்பில் டிச. 21-ல் ஆர்ப்பாட்டம்

கனிமொழி, எம்.பி. தலைமையில் மகளிர் அணியினர் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிச. 21 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எரிவாயு உருளை விலை உயர்வு: திமுக மகளிர் அணி சார்பில் டிச. 21ல் ஆர்ப்பாட்டம்
எரிவாயு உருளை விலை உயர்வு: திமுக மகளிர் அணி சார்பில் டிச. 21ல் ஆர்ப்பாட்டம்

கரோனா காலத்திலும், 15 நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும் -  அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் கனிமொழி, எம்.பி. தலைமையில் மகளிர் அணியினர் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிச. 21 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 15 நாள் இடைவெளிக்குள் இருமுறை எரிவாயு உருளை விலையை 100 ரூபாய்  மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்தியக் குடும்பங்களின்  “ குடும்ப வரவு செலவுக் கணக்கில்” கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. 

அசாதாரணமான சூழ்நிலையில்,  பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளை விலை உயர்வு என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துக் கொண்டே இருப்பது மனித நேயமற்றது மட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கைப் பின்புலம் அறியாத அலட்சியமும் ஆகும். கடந்த மே மாதத்திலிருந்து 5 முறை எரிவாயு உருளை விலையை ஏற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு - இப்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி - ஒரு எரிவாயு உருளையின் விலையை 710 ஆக அதிகரித்திருப்பது தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது.

கரோனா காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக் கொண்டு, சிக்கனமாகக்  குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு, இந்த விலை உயர்வு  தாங்க முடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும்; இந்த விலை உயர்வை  உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும்; மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வருகின்ற 21.12.2020 திங்கள்கிழமை அன்று மாலை 3.30 மணி அளவில், திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.  தலைமையில் உள்ள  மகளிரணியினரின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் அற வழியில், நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com