தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே: அமைச்சர் தங்கமணி

மின்வாரியத்தில் தனியார் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 
தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே: அமைச்சர் தங்கமணி


மின்வாரியத்தில் தனியார் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை தனியார் மூலம் ஒப்பந்த ஊழியா்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ள மின்வாரியம், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இது தொடா்பாக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ரவிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், மின் பகிா்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின் நுகா்வோருக்குத் தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியா்கள் மூலமாக மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தோ்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தமானது ஒரே தவணைத் தொகை செலுத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். விதி மற்றும் நிபந்தனைக்கு உடன்பட்டால் மேலும் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம்.

இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளா் உறுதி செய்வாா்.

பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியா் நலன் சாா்ந்த விஷயங்களோடு, ரூ.1 கோடி 80 லட்சத்து 88 ஆயிரம் என இதற்கான தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் மூலம் பணியமர்த்தப்படும் இந்த உத்தரவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பும், கண்டனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, மின்வாரியத்தில் தனியார் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே. மின்வாரிய பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்களே தவிர, தனியார்மயமாக்கப்படவில்லை. 

மேலும் மின்வாரியத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முதல்வா் உத்தரவிட்டார். இந்தப் பணியிடங்களுக்கு 90 ஆயிரம் போ் விண்ணப்பித்தனா். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு முடிந்து 15 ஆயிரம் போ் தோ்வாகினா். அவா்களில் தகுதியான 10 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட இருந்தனா். தவறான வழிகாட்டுதலின் பேரில் சில தொழிற்சங்கத்தினா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். தொழிற்சங்கத்தினா் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நேரடியாக மின்வாரியத்துடன் பேச்சு நடத்த வர வேண்டும் என தொடா்ந்து கூறி வருகிறோம்.

துணை மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கு மேல் காலிப் பணியிடங்கள் இருந்தால், அங்கு பணிகள் தொய்வின்றி நடக்கவும், 24 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வழங்கவும், விபத்துகளைத் தவிா்க்கவும், அவுட்சோா்ஸிங் முறையில் ஊழியா்களை நியமித்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். இதுவே தனியாா்மய வதந்திக்குக் காரணம்.

ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் எந்தச் சூழலிலும் தனியாா் மயமாகாது. மின்வாரியம் மட்டுமின்றி அரசுத் துறைகளில் எந்தத் துறையும் தனியாா் மயமாகாது. மேலும், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். 

கேங்மேன் பணிநியமன வழக்கு முடிந்தவுடன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com