ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசரச் சட்டத்தை எதிர்த்த வழக்குகள்: இறுதி விசாரணைக்காக ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசரச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம், இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மியை தடை செய்த அவசரச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம், இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து  ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கேம்ஸ்கிராப்ட் நிறுவனம் தரப்பில் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதை விட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது.  ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது. 

கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது தொடர்பாக குதிரை பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் உள்ளதால் வழக்கு முடியும்வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்  என வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கவும், இறுதி வாதங்களுக்காக மேலும் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

குதிரை பந்தயந்தைம், ரம்மியையும் ஒன்றாக கருத முடியாது. குழந்தைகள் பெற்றோரின் பற்று அட்டைகளை பயன்படுத்தி  ஆன்லைன் ரம்மி விளையாடுகின்றனர். மேலும் அவசரச் சட்டத்துக்கு பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருத முடியாது என தெரிவித்தனர். அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com