நில விவகாரத்தில் தலையிடக்கூடாது: திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு 

நில விவகாரத்தில் தலையிடக்கூடாது என திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்.
உயா்நீதிமன்றம்.

நில விவகாரத்தில் தலையிடக்கூடாது என திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், துரைப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் எனக்கு 13.50 ஏக்கர் நிலம் உள்ளது. அதற்கு அருகில்  திருப்போரூர் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மனுக்கும் நிலம் உள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து எங்களது நிலத்துக்கு  செல்லவும் வெளியேறவும் சங்கோதியம்மன் கோயில் நிலத்துக்கு  அருகாமையில் உள்ள பொதுசாலையை பயன்படுத்தி வந்தோம். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்போரூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட  இதயவர்மன்,  என்னிடம் நிதி கேட்டார். நான் கொடுக்காததால், என் மீது கோபத்தில் இருந்தார். பின்னர், அவரது நிலத்தை எனக்கு விற்பனை செய்தார்.

இதயவர்மன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரான பின்னர்,  அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார். இதயவர்மனும் அவரது தந்தை லெட்சுமிபதியும் ஆள்களை சேர்த்துக் கொண்டு அத்துமீறி என்னுடைய நிலத்துக்குள்  நுழைந்து வேலியை சேதப்படுத்தினர். நிலத்துக்கு செல்லும் பாதையில் பெரிய குழி பறித்து பொதுசாலையை அணுக முடியாமல் செய்தனர்.

கோயில் நிலத்தை நான் அபகரிக்கப் போவதாக மக்களிடையே அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திருப்போரூர் போலீசில் புகார் அளித்தேன். சிவில் பிரச்சினை எனக்கூறி   திருப்போரூர் வட்டாட்சியார் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருப்போரூர் வட்டாட்சியரை ஆகியோர் விசாரித்தபோது, அவர்களை விசாரணை செய்ய விடாமல் இதயவர்மன் தொந்தரவு செய்தார்.

அதிகாரிகள் முன்னிலையில் என்னை அவரது ஆட்கள் மிரட்டினர். கடந்த ஜூலை மாதம் என் நிலத்தில் பணி செய்து வந்தவர்களை இதயவர்மனின் ஆட்கள் தாக்கினர்.  திடீரென இதயவர்மன் துப்பாக்கியால் என்னை சுட்டு கொலை செய்ய முயன்றார். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். திருப்போரூர் வட்டாட்சியர் விசாரணையில் சம்மந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பும் அல்ல. கோயிலுக்கு சொந்தமானது  அல்ல என்பது தெரியவந்தது.  

ஆனால் இறுதி முடிவு எடுக்காமல் மேல் விசாரணைக்காக செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு  வட்டாட்சியர் பரிந்துரைத்தார். இவரது பரிந்துரை உத்தரவை ரத்து செய்து, மீண்டும்  வட்டாட்சியரே விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க  வேண்டும். இதயவர்மனோ அவரது ஆட்களோ என்னுடைய நிலத்துக்கு சென்று வர இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக,செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் திருப்போரூர் வட்டாட்சியர் எம்எல்ஏ இதயவர்மன் அவரது தந்தை லட்சுமிபதி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் மேல் விசாரணைக்காக வருவாய் கோட்டாட்சியர்,  வட்டாட்சியர் பரிந்துரை செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

எம்எல்ஏ இதய வர்மன் மற்றும் அவரது ஆட்கள் மனுதாரருக்கு எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கக்கூடாது நில விவகாரத்தில் தலையிட கூடாது என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com