இளையான்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கி முளைத்த நெற்பயிர்கள்: கவலையில் விவசாயிகள் 

இளையான்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இளையான்குடி ஒன்றியம் அய்யம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் தேங்கிய மழைத்தண்ணீரில் மூழ்கியுள்ள விளைந்த நெற்பயிர்கள்
இளையான்குடி ஒன்றியம் அய்யம்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களில் தேங்கிய மழைத்தண்ணீரில் மூழ்கியுள்ள விளைந்த நெற்பயிர்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

இளையான்குடி ஒன்றியத்தில் வானம் பார்த்த பூமியாகத்தான் நெல் விவசாயம் நடைபெறுகிறது. நடவு செய்வதைவிட விதைப்பு முறையில் விவசாயிகள் நெல்லை விதைப்பு செய்தனர். இந்த ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் நெல் விதைப்பு நடந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 3 மாத வித்தான நெல் ரகங்களை விவசாயிகள் விதைப்பு செய்துள்ளனர். 

விதைப்பு செய்த சில வாரங்களிலேயே தேவையான நேரத்தில் மழை பெய்ததால் நெல் முளைத்துப் பயிராக வளர்ந்து தற்போது பால்பிடித்து நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இளையான்குடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளுக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைத்து வருகிறது.

இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த சாலைக்கிராமம், சூராணம், பரத்தகவயல்.விரையாதகண்டன், ஆக்கவயல், முத்தூர், அரசடி , அய்யம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக வளர்ந்திருந்த நெற்பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கியுள்ளன. வயல்களிலிருந்து மழைத்தண்ணீர் வெளியேற வழியில்லாததால் நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து மிதக்கின்றன. பல இடங்களில் நெற்கதிர்கள் வயலில் உதிர்ந்து மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் நெல் விதைத்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

இது குறித்து பரத்தகவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகநாதன் கூறியதாவது, 

இந்தாண்டு விதைப்பு காலத்தில் பெய்த மழையால் நெல் மணிகள் பயிராக வளர்ந்து பால்பிடித்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்தாண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில் இளையான்குடி பகுதியில் புயல் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து பெய்த மழையால் விவசாய நிலங்களில் மழைத்தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் விளைந்த நெற்பயிர்களை மூழ்கடித்தது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com