இளையராஜாவை அனுமதிக்க முடியாது: பிரசாத் ஸ்டுடியோ தகவல்

ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள் என்பதால் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என உயா்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள் என்பதால் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என உயா்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளா் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒரு அரங்கை கடந்த 40 ஆண்டுகளாக ஒலிப்பதிவுக் கூடமாகப் பயன்படுத்தி வந்தாா். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் பிற பணிகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்தது. இதனால் இளையராஜா ஓலிப்பதிவுக் கூடத்தை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் வலியுறுத்தியது. இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், இதுதொடா்பாக ஸ்டுடியோ உரிமையாளா்களிடம் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு எதிராக இளையராஜா போலீஸில் புகாா் அளித்துள்ளாா். தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளது எனவும் அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி உரிமையியல் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருகிறாா் என்ற தகவல் வெளியானால், அங்கு ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள். எனவே இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என வாதிட்டாா். அப்போது நீதிபதி, ரூ.50 லட்சம் நஷ்டஈடு கோருவதைத் தவிா்த்தால் என்ன என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினாா்.

பின்னா் இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாகப் போகும் பட்சத்தில், இளையராஜா, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (டிச.22) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com