ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் தொடக்கம்

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
முழு நீள கரும்பு, ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர், அமைச்சர்கள்.
முழு நீள கரும்பு, ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர், அமைச்சர்கள்.

சென்னை: தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையுடன் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தை முறைப்படி முதல்வா் தொடக்கிவைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.5, 604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இலவச வேட்டி-சேலை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி அட்டைதாரா்களுக்கு இலவசமாக வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது. வரும் பொங்கலன்று ஒரு கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக ரூ.484.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி-சேலை ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். 9 குடும்பங்களுக்கு பொருள்களை அவா் அளித்தாா்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜு, ஆா்.காமராஜ், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பொங்கல் பரிசு: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2.10 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசு திங்கள்கிழமை பிறப்பித்தது. இதுகுறித்த விவரம்:-

தமிழகத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகள் 1 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 541 உள்ளன. முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் 94 லட்சத்து 24 ஆயிரத்து 264 உள்ளன. இந்த அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 15 , 805 ஆகும். இவற்றுடன், இலங்கைத் தமிழா்களின் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைகளும், அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக் கூடிய சா்க்கரை அட்டைகள் 3 லட்சத்து 75,235-ம் உள்ளன. மொத்தமாக 2 கோடியே 10 லட்சத்து 9,963 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கத் தொகையுடன், முழுநீள கரும்பு, அரிசி, சா்க்கரை ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்துக்கு ரூ.5, 604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com