
ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேல் மணலார் கிராமத்தில் யானை மிதித்து இறந்த தொழிலாளி முத்தையா.
தேனி மாவட்டம் ஹைவேவிஸ்- மேகமலை மலைக்கிராமத்தில் வியாழக்கிழமை காட்டு யானை மிதித்து மீண்டும் ஒருவர் பலியான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஹைவேவிஸ் மேகமலை பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களை சுற்றி அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வசித்தும் மக்களில் பெரும்பான்மையானோா் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஆவா்.
இந்நிலையில், கடந்த வாரம் மணலாா் எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் உரமிட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வழியில் மறைந்திருந்த காட்டு யானை அவரைத் தாக்கி காலால் மிதித்ததில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மேல் மணலார் பகுதியில் மற்றொரு கூலித் தொழிலாளி முத்தையா(54) அதே காட்டு யானை மிதித்து கொன்றது. தொடரும் இதுபோன்ற சம்பவம் மலைக் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் எட்டாயிரம் பேர் வசிக்கும் மலைக்கிராமத்தில் காட்டு யானை ஆள்கொல்லி யானையாக மாறிவிட்டதால் அந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் அனுப்ப மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே மலைக்கிராம குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் இருந்ததாகவும், இதுகுறித்து வனத்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...