
பாளையங்கோட்டை அழகியமன்னார் சிரீ ராஜகோபால சுவாமி
திருநெல்வேலி: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோவில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதேபோல மூலவர், உற்சவரை கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்கள் இன்று ஒரு நாள் மட்டும் சொர்க்கவாசலைக் கடந்து செல்ல அனுமதி பெறுவார்கள். அதன்படி நிகழாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள அழகியமன்னார் சிரீ ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் துளசிமாலை, வெற்றிலையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சன்னியாசி கிராமம் அலமேலுமங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோயிலில் சயன திருக்கோலத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனையும் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலையில் வைகுண்ட ஏகாதசி சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல கொக்கிரகுளத்தில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் கோயில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள கரியமாணிக்கபெருமாள் கோவில், சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில், தச்சநல்லூரில் உள்ள வெங்கடாஜலபதி கோயில், மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவில், திருநெல்வேலி கெட்வெல் சஞ்சீவி வரத ஆஞ்சநேயர் கோவில், பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோவில் ஆகியவற்றிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன. பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அருள்மிகு வேங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.