திருவள்ளூர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தகராறு: பொறியியல் கல்லூரி மாணவர் கொலை

திருவள்ளூர் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் மரைன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய போது மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி மற்றும் போலீஸார் கல்லூரி வளாகத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே ஜமீன் கொரட்டூரில் தனியார் மரைன்(கப்பல்) பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 172 பேர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர். அப்போது, கல்லூரி வளாகத்தில் படித்து வரும் 3-ஆம் ஆண்டு மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் கிடந்த பிளாஸ்டிக் சேரை உடைத்து கைப்பிடியால் தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் பிகார் மாநிலம் பாட்னா பகுதியைச் சேர்ந்த 3-ஆம் ஆண்டு மாணவர் ஆதித்யா ஷர்மா கழுத்தில் குத்துப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(திருவள்ளூர் பொறுப்பு) சண்முகபிரியா, காவல் ஆய்வாளர் ஷோபாதேவி மற்றும் காவலர்கள் ஆகியோர் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடையே தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து வெளிமாநில மாணவர் யார் தாக்கியதில் உயிரிழந்தார், தகராறுக்கான காரணம் குறித்தும் 3,4 ஆண்டு மாணவர்களிடையே விசாரித்து வருகின்றனர். 

தனியார் மரைன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com