3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன்!

தமிழக சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான 3ஆவது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன்!


திருச்சி: தமிழக சட்டப் பேரவை 2021 தேர்தலுக்கான 3ஆவது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. 

முதல்கட்ட பிரசாரம் கடந்த 13 ஆம் தேதி மதுரையில் தொடங்கி கன்னியாகுமரி வரை நடைபற்றது. இரண்டாவது கட்ட பிரசாரம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

 3 ஆவது கட்ட பிரசாரத்துக்கு திருச்சி மண்டலத்தை தேர்வு செய்துள்ளது மக்கள் நீதி மய்யம். டிச.27ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாள்களுக்கு பிரசாரம் நடைபெறுகிறது.

இதன்படி, சென்னையிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் விமானம் மூலம் வருகை தருகிறார். விமான நிலையத்தில், கட்சியினரும், நற்பணி மன்றத்தினரும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். 
இதன் தொடர்ச்சியாக, விமான நிலையத்திலிருந்து வயர்லெஸ் சாலை, கே.கே. நகர், சுந்தர் நகர் வழியாக எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு செல்லும் வழியெங்கும் காரில் நின்றபடியே மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

முதல் நிகழ்வாக, திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் சிறு, குறு தொழில்முனைவோர் கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றுகிறார். இதன் தொடர்ச்சியாக, காட்டூர் சிங்கார மஹாலில் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். 

பின்னர், எஸ்ஆர்எம் ஹோட்டலில் இளைஞர்கள், மகளிர், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். திருவெறும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறியும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இரண்டாவது நாளாக, திருச்சியின் பிரதான இடங்களான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்கெட், திருவரங்கம் ஆகிய இடங்களில் வாகனங்களில் வலம் வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

மூன்றாவது நாளாக நாகப்பட்டினம், நாகூர், மயிலாடுதுறை, திருப்புவனம், கும்பகோணம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நான்காவது நாளான டிச.30 ஆம் தேதி திருமயம், காரைக்குடி, காளையார் கோயில், பரமக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் முடித்து மதுரை செல்கிறார். 

மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பும் வகையில் 3 ஆவது கட்ட பிரசாரத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் பொதுச் செயலர் எம். முருகானந்தம் தலைமையில், அந்தந்த பகுதி மாவட்ட, மாநில, மண்டல நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com