திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தங்க காக வாகனத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவான்.
சனிப்பெயர்ச்சியையொட்டி கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தங்க காக வாகனத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ சனீஸ்வரபகவான்.

காரைக்கால் :  திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் உத்ஸவர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம்,  திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி கொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அருள்பாலிக்கிறார். தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு பெயர்ச்சியாவதை குறிப்பிடும் வகையில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்படவுள்ளன.

கரோனா பரவும் காலமாக இருப்பதால்  சனிப்பெயர்ச்சி விழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவுக்கு தடை விதிக்கக் கோரி  கோவிலின் ஸ்தானிகர்கள் சங்கத்தை சேர்ந்தோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி விழாவை நடத்தலாம் என அனுமதித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்குள் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்குள் வரக்கூடிய பக்தர்கள் உள்ளிட்ட அனைவரும்
ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது ஆண்டிஜன் முறையில், 48 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட கரோனா நெகடிவ் சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயம். ஏற்கெனவே பதிவு செய்தோர் மட்டுமே 26-ஆம் தேதி மற்றும் 27-ஆம் தேதி வரமுடியும். முன்பதிவு செய்யாத புதியவர்கள் யாரும் வரமுடியாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி 26-ஆம் தேதி பதிவு செய்தோரில், கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தோர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மிக குறைந்த பக்தர்களே தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சியையொட்டி உத்ஸவர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் பிராகாரம் எழுந்தருளச் செய்து, வசந்த மண்டப்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் உத்ஸவரையும், மூலவரையும் தரிசனம் செய்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே.. 2021: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

நாளை சனிப்பெயர்ச்சி விழாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. இதுவரை சனிப்பெயர்ச்சி நாளில் 17 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களை முறைப்படி பரிசோதித்து கோவிலுக்குள் அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

முந்தைய காலங்களில் சனிப்பெயர்ச்சி விழாவில் பல லட்சம் பக்தர்கள் திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி நாள் முதல் 2 மாத காலம் வருகை தருவர். சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.  நிகழாண்டு சனிப்பெயர்ச்சி விழா குறைந்த பக்தர்கள் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ளது.  நளன் தீர்த்தக் குளத்தில் தண்ணீர் விடப்படவில்லை. அன்னதானம் தடை செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு போக்குவரத்து வசதிகள் இல்லை.

நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சீர்குலைத்துவிட்டார் என புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். பக்தர்கள் வரத்தை தடை செய்யும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது, முடிவை திரும்பப் பெறவேண்டும் என திருநள்ளாறு பகுதி வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com