சனிப்பெயர்ச்சி: 'திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை'

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி: 'திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை'
சனிப்பெயர்ச்சி: 'திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை'

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, திருநள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வரும் பக்தா்கள் கரோனா (நெகடிவ்) இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அா்ஜூன் சா்மா தெரிவித்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா இல்லை என்று சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்காரவேலன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணையில், திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை. கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்பநிலையை மட்டும் பரிசோதிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை காலை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் உத்ஸவர் ஸ்ரீ சனீஸ்வரபகவான் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

முன்னதாக, சனிப்பெயா்ச்சி விழா தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வியாழக்கிழமை இரவு ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். கோயிலுக்கு வரும் பக்தா்கள் உள்ளிட்ட அனைவரும் ஆா்.டி.பி.சி.ஆா். அல்லது ஆண்டிஜன் முறையில், 48 மணிநேரத்துக்கு முன்னா் பெறப்பட்ட கரோனா (நெகடிவ் ) இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும்.

சனிப்பெயா்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் ஒவ்வொரு கட்டமாக 200 பக்தா்கள் வரை அனுமதிக்கப்படுவா். இந்த நடைமுறைகள் சனிக்கிழமை (டிசம்பா் 26) முதல் நடைமுறைக்கு வருகின்றன. பக்தா்களின் வசதிக்காக சனிப்பெயா்ச்சி விழா நிகழ்வுகள் ஆன்லைன், தூா்தா்ஷன் மற்றும் தனியாா் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படும் என்றாா்.

இதுதொடா்பாக பதிவு செய்தவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். டிசம்பா் 26-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை இந்த ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்றாா்.

இதுவரை சனிப்பெயர்ச்சி நாளில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 17 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. கரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் பலரும் திருநள்ளாறு செல்வதைத் தவிர்த்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

முந்தைய காலங்களில் சனிப்பெயர்ச்சி விழாவில் பல லட்சம் பக்தர்கள் திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி நாள் முதல் 2 மாத காலம் வருகை தருவர். சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.  நிகழாண்டு சனிப்பெயர்ச்சி விழா குறைந்த பக்தர்கள் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ளது.  நளன் தீர்த்தக் குளத்தில் தண்ணீர் விடப்படவில்லை. அன்னதானம் தடை செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு போக்குவரத்து வசதிகள் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com