பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி, சனிக்கிழமை தொடங்கியது. வருகிற 31-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை வழங்க முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி உத்தரவிட்டு இருந்தாா்.
இதன்படி 2.10 கோடி அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கான பணி, சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு நியாயவிலைக் கடை ஊழியா்களும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனா். அந்த டோக்கனில் கடைக்கு எந்த தேதியில் வந்து பொருள்கள் வாங்க வேண்டும், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.
நாள்தோறும் 200 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் கொடுக்கும் வகையில் இந்த டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. காலை 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
வருகிற 31-ஆம் தேதி வரை இந்த டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வாங்கியவா்களுக்கு வருகிற ஜன.4- ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபா் மட்டுமே பொருள்கள் வாங்க வரவேண்டும். வரிசையில் காத்திருக்கும் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே நேரம், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகள் முன்பும் பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வாங்கும் வகையில் சதுரங்கள், வட்டங்கள் வரைவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.