திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சியையொட்டி மூலஸ்தானத்தில் தங்கக் கவசம் அணிந்த சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பெயர்ச்சி நேரத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு நடைபெறும் ஆராதனை.
பெயர்ச்சி நேரத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு நடைபெறும் ஆராதனை.

காரைக்கால் :  திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சியையொட்டி மூலஸ்தானத்தில் தங்கக் கவசம் அணிந்த சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை இடம் பெயர்வதாக கூறப்படுவது சனி கிரகம். இக்கிரகத்தின் அதிபதியான ஸ்ரீ சனீஸ்வரன் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் அனுகிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரையும், ஸ்ரீ சனீஸ்வரபகவானையும் வழிபட்டதால் அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக கூறப்படுகிறது. இதே நிலை சனீஸ்வரபகவானை தரிசிப்போருக்கும் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் இக்கோவிலில் சனிபகவான் தனி சந்நிதிகொண்டு, அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில் அருள்பாலிக்கும் வகையில் இருப்பதால் மிகுந்த சிறப்பை பெறுகிறது.

இக்கோவிலில்  சனிபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் நாளான சனிக்கிழமை காலை உத்ஸவரான ஸ்ரீ சனீஸ்வரர், தங்க காக வாகனத்தில் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளச்  செய்யப்பட்டார்.

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை  காலை 5.22 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், மகா தீபாராதனை காட்டப்பட்டது. தங்கக் கவசம் அணியப்பட்டிருந்த சனிபகவான் சந்திதி முழுவதும், மலர்களால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  முன்னதாக அதிகாலை 27 வகை திரவியங்களால் அபிஷேகமும் பிறகு நீல நிற மலர் மற்றும் செவ்வரளி மலராலும்  மாலை சாற்றப்பட்டிருந்த சனீஸ்வரனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், நலத்துறை அமைச்சர் கந்தசாமி,  தருமபுர ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன்  சர்மா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான எம்.ஆதர்ஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கட்டுப்பாடுகளுடன் தரிசனம் : கரோனா பரவல் தடுப்பாக பக்தர்கள் கோயில் இணையத்தில் பதிவு செய்தோர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நளன் தீர்த்தக் குளத்தில் தண்ணீர் விடப்படாததால், பக்தர்கள் கோயிலுக்கு  வந்தனர்.

முகக் கவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்தும், வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதித்தும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தர்ம தரிசன வரிசை, கட்டண வரிசை என அமைக்கப்பட்டிருந்தாலும், இணையத்தில் முன் பதிவு செய்தோர் குறைந்த எண்ணிக்கையிலேயே தரிசனத்தில் பங்கேற்றனர்.

வழக்கமாக திருநள்ளாறு கோவிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி நாளில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பதும், நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவதும் என திருநள்ளாறு நகரமே பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கும்.

கரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் சில ஆயிரம் பக்தர்களே தரிசனத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com