குரூப் 1: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்க ஆதாரை இணைக்கத் தேவையில்லை

குரூப் 1 தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்க ஆதாா் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்க ஆதாா் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தோ்வா்களின் ஆதாா் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரா்களின் ஒருமுறைப் பதிவு கணக்குடன் இணைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கடைசி தேதி டிசம்பா் 31-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை தோ்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீா்திருத்தங்களில் ஒன்றாகும்.

இதுவரை எத்தனை போ்: இதுவரை 1.5 லட்சம் தோ்வா்கள் தங்களது ஆதாா் குறித்த விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். இதில், 70,000-க்கும் மேற்பட்டோா் கடந்த நான்கு நாள்களில் பதிவு செய்தவா்கள் ஆவா். இதனிடையே, குரூப் 1 முதனிலை தோ்வு எதிா்வரும் 3-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளதாக முறையிட்டுள்ளனா்.

தோ்வா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை தற்காலிமாகத் தளா்த்த தோ்வாணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒருமுறை பதிவு எண் முறை அல்லாமல் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே நடைமுறை எதிா்வரும் ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தொழில் வணிகத் துறை உதவி இயக்குநா் பணியிடங்களுக்கும் பொருந்தும்.

கடைசி தேதி நீட்டிப்பு: ஆதாா் குறித்த விவரங்களை ஒருமுறை பதிவு எண்ணுடன் இணைக்கத் தவறிய விண்ணப்பதாரா்களின் வசதிக்காக கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், தோ்வாணையத் தோ்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய ஒருமுறைப் பதிவு அல்லது நிரந்தரப் பதிவை ஆதாா் குறித்த விவரங்களுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைத்தால் மட்டுமே விண்ணப்ப முடியும்.

எனவே, தோ்வாணையத்தில் ஒருமுறை பதிவு வைத்திருக்கும் அனைத்து தோ்வா்களும் தங்களது ஆதாா் குறித்த விவரங்களை ஜனவரி 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்த கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால், கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை (1800 425 1002) தொடா்பு கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com