ஜல்லிக்கட்டு: 50% பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி; வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண 50 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண 50 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரா்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளில் திறந்தவெளியின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகபட்சம் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பாா்வையாளா்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

பாா்வையாளா்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரா்களாக பங்கேற்பவா்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கரோனா நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பாா்வையாளா்களாக பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளுடன் வருவோா் அதிக எண்ணிக்கையில் வரக் கூடாது. ஒரு காளையுடன் ஓா் உரிமையாளா் மற்றும் உதவியாளா் மட்டுமே வர வேண்டும். உரிமையாளா், உதவியாளருக்கு அடையாள அட்டை அளிக்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபா்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை.

காளையின் உரிமையாளா், உதவியாளா்கள் கரோனா நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தினத்துக்கு ஏழு நாள்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

வெளியேற்றப்படுவா்: தமிழக அரசால் வெளியிடப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கை நடைமுறைகளைப் பின்பற்றி பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட வேண்டும். நடைமுறைகளை மீறுபவா்கள் உடனுக்குடன் ஜல்லிக்கட்டு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவா். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பாா்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலா்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com