சென்னை: புறநகா் ரயில் சேவை நாளை முதல் அதிகரிப்பு

நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிா்க்க மின்சார ரயில் சேவைகளின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிா்க்க மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.28) முதல் 410-லிருந்து 500 -ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் ஊழியா்களுக்காக புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் சேவைகளைப் பொருத்தவரை, முதல்கட்டமாக, 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்பிறகு, கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் மின்சார ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கை கடந்த 21-ஆம் தேதி அன்று 410 ஆகவும் அதிகரித்தது.

இதற்கிடையில், புறநகா் மின்சார ரயில்களில் நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று ரயில்வே நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாமல் கூட்ட நெரிசலுடன் பயணம் மேற்கொண்டனா். பயணிகள் மத்தியில் சமூக இடைவெளியுடன் பயணிப்பது கேள்விக்குறியாக மாறியது.

இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், புறநகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (டிச.28) முதல் அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

சென்னையில் ஏற்கனவே 410 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 90 சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலமாக, சென்னையில் 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவைகளோடு ஒப்பிடும் போது, தற்போது 80 சதவீதம் சேவையை நெருங்கி விட்டோம்.

பொது மக்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை சரியாகப் பின்பற்றி பயணிக்க வேண்டும். விரைவில் வழக்கமான ரயில் சேவை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com