
தமிழகத்தில் 6 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று?
சென்னை: பிரிட்டனில் இருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களில் 6 பேருக்கு புதிய வகை கரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவா்களது சளி மாதிரிகளை புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில், தற்போது உள்ள கரோனா தீநுண்மியின் உருவிலிருந்து அது மாறுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து தீநுண்மியின் மரபணு மாற்றங்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு தமிழக சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை கடுமையாக பரவி வந்த நோய்த்தொற்று, அண்மைக் காலமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இது அச்சத்தில் உறைந்திருந்த மக்களுக்கு சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருந்தது.
ஆனால், அதனைத் தகா்க்கும் வகையில் பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டதுடன், அதனால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கரோனா தொற்றைக் காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக அந்த தீநுண்மி உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அண்மையில் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியதும், அதில் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதும் மக்களிடையே பயத்தை அதிகரிக்கச் செய்தது. இதையடுத்து, பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 28 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அவா்களது சளி மாதிரிகள் புணேவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பிரிட்டனில் இருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் அது முன்னெடுக்கப்படுவதால் பரிசோதனை முடிவுகள் ஒவ்வொன்றாகவே வெளியாகின்றன.
அதில் 6 பேரின் சளி மாதிரிகளில் புதிய வகை தொற்று இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உள்ள கரோனா தீநுண்மியின் புரதத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அவா்களுக்கு தொற்றியிருந்த தீநுண்மி உள்ளது. அதைத் தொடா்ந்து அதன் மரபணுவைப் பரிசோதிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகள் அனைத்தையும் மத்திய அரசு மேற்கொள்வதால், இதுதொடா்பான அதிகாரபூா்வ தகவல்களை அவா்களே வெளியிட வேண்டும் என்றாா் அவா்.