2021-ல் 443 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி

கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில், அடுத்த ஆண்டு 443 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
நாமக்கல் குள்ளம்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையாற்றும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
நாமக்கல் குள்ளம்பட்டி கிராமத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரையாற்றும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

நாமக்கல்: கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில், அடுத்த ஆண்டு 443 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே.  பழனிசாமி குள்ளம்பட்டி கிராமத்தில் மக்களிடையே பேசியதாவது: முதல்வராக இருந்த எம்ஜிஆர்,  ஜெயலலிதா ஆகியோர் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளனர். அந்த வழியில் வந்த அதிமுக அரசு மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

முதல்வர் பதவி மீது ஆசை வைக்கவில்லை. மக்களைத்தான் முதல்வராக பார்க்கிறேன்.  முதல்வர், முதல்வர் என அலைபவன்  நான் இல்லை. சிலர் முதல்வராக வேண்டும் என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். இந்த அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.  2000 சிறு மருத்துவமனைகள் ஏற்படுத்தி அங்கு மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.70 ஆயிரம் கூடுதல் நிதியாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 6 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் நிகழாண்டில் 313 மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் மொத்தம் 443 மாணவ மாணவியருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com