கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தை பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர்.

கோவை:  தமிழகத்தை பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

திமுக சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் மேயருமான சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக பதவி வகித்தபோது, நிறைய பாலங்களைக் கட்டிக் கொடுத்துள்ளார். ஆனால், அதிமுக ஆட்சியில் அவ்வாறு எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியின்போது, போரூர் பாலத்துக்கு அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, போரூர் பாலத்துக்குத் தேவையான இடத்தைக் கையகப்படுத்தியபோது திமுகவினர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். நில உரிமையாளர்களிடம் சமாதானம் பேசி நிலத்தை கையகப்படுத்தி பாலம் கட்டப்பட்டது. திமுகவினர் அவசர கதியில் விட்டுச் சென்ற பல திட்டங்களை அதிமுக சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. 

அதிமுக ஆட்சியில்தான் பல்லாவரம் பாலம் கட்டப்பட்டது. வேளச்சேரி, மேடவாக்கம், கீழ்கட்டளை, பெருங்களத்தூர் மற்றும் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

நெமிலிச்சேரியில் இருந்து மீஞ்சூர் வரை கட்டப்பட்ட புறவழிச் சாலை அடுத்த 10 நாள்களுக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மாநகராட்சியில் எந்தப் பாலமும் கட்டப்படவில்லை என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன். கத்திவாக்கம், வள்ளலார் மேம்பாலம்,  ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றைக் கட்டியுள்ளோம். சென்னையில் மட்டும் 86 சிறிய பாலங்களைக் கட்டியுள்ளோம். 15 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தெரியாமல் பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில்தான் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் திமுகவினர்தான். துரைமுருகன் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தபோது இருந்த சொத்து விவரங்களையும், தற்போதுள்ள சொத்து விவரங்களையும் அவர் வெளியிடத் தயாரா?

மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பொய்யான ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. அந்த வெறுப்பில்தான் இத்தனை பொய்யான புகார்களைத் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஓய்வுபெறும் நேரத்தில் அரசியலில் இறங்கியுள்ளார். நான் 1974-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தேன். 46 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். கமல்ஹாசன்  அரசியலில் ஜீரோ. 

அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை: நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்கிறது. பாஜகவுடனான எங்களது கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், தமிழகத்தை பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

ஸ்டாலின் மகன் உதயநிதி எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அரசியலில் அவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அக்கட்சியில் ஏற்கெனவே உள்ள மூத்த தலைவர்களை முன்னிறுத்தவில்லை. இதனால்தான் அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என விமர்சிக்கிறோம். ஆனால், அதிமுகவில் தலைமைக்கும், மக்களுக்கும் உழைப்பவர்களுக்கே எப்போதும் முன்னுரிமை என்றார். 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே.சின்னராஜ்  ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com