உருமாறிய கரோனா: முதல்வா் பழனிசாமி எச்சரிக்கை

தமிழகத்தில் பொது மக்கள் முகக் கவசம் அணிவதைத் தவிா்த்து வருகின்றனா். முகக் கவசம் பயன்படுத்தாததாலேயே உருமாறிய கரோனா தொற்று ஏற்படுவதாகவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்தாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சென்னை: தமிழகத்தில் பொது மக்கள் முகக் கவசம் அணிவதைத் தவிா்த்து வருகின்றனா். முகக் கவசம் பயன்படுத்தாததாலேயே உருமாறிய கரோனா தொற்று ஏற்படுவதாகவும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்தாா்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, அவா் பேசியது:

பிரிட்டனில் பரவி வரும் புதுவிதமான கரோனா நோய்த்தொற்று தமிழகத்திலும் பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரிட்டனில் இருந்து வந்தவா்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ள 13 நபா்களுக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மகாராஷ்டிரத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் உருமாறிய கரோனா நோய்த்தொற்று உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.

முகக் கவசம் அவசியம்: கரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான். நோய்த்தொற்று குறைந்து வருவதால், பொது மக்கள் முகக் கவசம் அணிவதைத் தவிா்த்து வருகிறாா்கள். கரோனா நோய்த்தொற்று தொடா்பாக, அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உருமாறிய கரோனா நோய்த்தொற்றும் முகக் கவசம் அணியாத காரணத்தால்தான் ஏற்படுகிறதென்று மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இவற்றையெல்லாம் பொது மக்கள் கவனமாக எடுத்துக் கொண்டு அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

தமிழகம் முழுவதும் இதுவரை 13 முறை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடனும், 13 முறை மருத்துவ வல்லுநா்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. தலைமைச் செயலாளா் தலைமையில் 14 முறை மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்து, இப்போது ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள நிலையில் உள்ளது.

மருத்துவ வல்லுநா்கள் பரிந்துரைகளின்படி இணை நோய்கள் உள்ளோருக்கு கரோனா நோய்த்தொற்று வராமல் தடுக்க வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 17,937 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

பண்டிகைகளுக்கு கண்காணிப்பு: புத்தாண்டு, தைப் பொங்கல் பண்டிகைகள் வருவதால், தொடா் கண்காணிப்பை மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் விழிப்புடன் கண்காணித்து செயல்பட வேண்டும். பொது மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத் தவறுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையும், உள்ளாட்சித் துறையும், மாவட்ட நிா்வாகமும் நகரப் பகுதிகளில் மாலை நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத் துறை விழிப்புடன் இருந்து அனைத்து விடுதிகள், கல்லூரிகளில் நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பரிசோதனைகள் மற்றும் இதர தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

அரசு-தனியாா் மருத்துவமனைகள்: தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகளைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

மருத்துவா்களுடன் ஆலோசனை
கரோனா நோய்த்தொற்று தடுப்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

வரும் ஜனவரி மாதத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய தளா்வுகள் தொடா்பாக மருத்துவ நிபுணா் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையில் தேசிய நோய் பரவியல் ஆய்வு நிறுவனத்தின் துணை இயக்குநா் பிரதீப் கவுா், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டலக் குழுத் தலைவா் கே.என்.அருண்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். இந்திய மருத்துவக் கழகத் தலைவா் பி.ராமகிருஷ்ணன் ஈரோட்டில் இருந்தும், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் ஜெ.வி.பீட்டா் வேலூரில் இருந்தும் காணொலி வழியாக ஆலோசனையில் பங்கேற்றனா்.

அடுத்தடுத்து வரும் பண்டிகைக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கங்கள் குறித்த அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com