
'வெற்றி நடைபோடும் தமிழகம்' தேர்தல் பரப்புரை: நாமக்கல்லில் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி
நாமக்கல்: "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரையை தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை தொடங்கினார்.
பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்த பின் அங்குள்ள திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அதிக அளவில் நன்மைகளை வழங்கிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வசூல் செய்வதற்காகவே சில கட்சிகள் உள்ளன. அது எந்த கட்சி என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாலையோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. அதிக அளவில் கடன் வழங்கியது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. அதில் தேவையான கடன்களைப் பெற்று மக்கள் பயன் பெறலாம். நாமக்கல் மாவட்டம் அதிமுக ஆட்சியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என்றார்.
முன்னதாக பொதுமக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.