எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை எஸ்.சி., எஸ்.டி. பணியாளா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவு காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க உயா்நிலைக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு மேற்கொண்ட விசாரணையில் எஸ்.சி. பிரிவினா்களுக்கான 1,234 பணியிடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கான 614 பணியிடங்கள் என மொத்தம் 1,848 பணியிடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் 166 பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்தது. இந்தப் பின்னடைவு காலிப் பணியிடங்களை நேரடி நியமனங்கள் மூலம் நிரப்ப தமிழகம் முழுவதும் உள்ள 8 கண்காணிப்புப் பொறியாளா்களுக்கும், 20 மண்டல பொறியாளா்களுக்கும், மாநில நெடுஞ்சாலைகள் துறை இயக்குநா் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

ஆனால், இதுவரை நிரப்பப்படவில்லை. எனவே நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், எழுத்தா், ஓட்டுநா் உள்ளிட்ட பின்னடைவு காலிப் பணியிடங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com