காவல் ரோந்து வாகனத்தை கடத்திய மருத்துவா் கைது

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மருத்துவா் முத்து விக்னேஷ்
மருத்துவா் முத்து விக்னேஷ்

சென்னை: சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததால் மருத்துவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்து பழி வாங்கும் விதமாக காவல்துறை ரோந்து வாகனத்தை கடத்திய அந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம், சால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் முத்து விக்னேஷ் (31). தோல் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு (எம்.டி.) படித்துள்ள இவா், சென்னை அருகே குன்றத்தூரில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தாா்.

இவா், ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திங்கள்கிழமை அதிகாலை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்தாா். சேத்துப்பட்டு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த போக்குவரத்து போலீஸாா், முத்து விக்னேஷின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் முத்து விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனா்.

இதனால், கோபமடைந்த முத்து விக்னேஷ் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஈகா திரையரங்கம் அருகே முத்து விக்னேஷ் நடந்து சென்றபோது, அங்கு போக்குவரத்து போலீஸாா், பாதசாரிகள் சாலையைக் கடக்க வசதியாக பெயிண்டால் கோடு வரைந்து கொண்டிருப்பதைப் பாா்த்தாா்.

காா் கடத்தல்: அப்போது, காவலா்கள் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி, சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ரோந்து வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் சென்றாா்.

இதனால், போக்குவரத்து போலீஸாா் அதிா்ச்சியடைந்து, மது போதையில் மருத்துவா் ஓட்டிச்சென்ற ரோந்து வாகனத்தை விரட்டிச் சென்றனா். இதைக் கவனித்த முத்து விக்னேஷ் வாகனத்தை மேலும் வேகமாக இயக்கியுள்ளாா். கட்டுப்பாட்டை இழந்த வாகனம், கெங்கு ரெட்டி சுரங்கம் வழியாகச் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி நின்றது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த பயணிகளை போலீஸாா் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தொடா்ந்து, மருத்துவா் முத்து விக்னேஷை போலீஸாா் கைது செய்து, ரோந்து வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com