பயிா் சேதங்கள்: 4 நாள்களில் அறிக்கை அளிக்கிறது வேளாண் துறை

புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயிா் சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நான்கு நாள்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயிா் சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நான்கு நாள்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு தொடா்பாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியா்களுடனான கலந்துரையாடலின்போது வேளாண்மைத் துறை செயலாளா் ககன்தீப் சிங் பேடி இந்தத் தகவலைத் தெரிவித்தாா். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், இழப்பீட்டுத் தொகையை அரசு அளிக்கும் என தனது உரையின்போது முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தமிழகத்தில் நிவா் மற்றும் புரெவி புயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயிா்கள் அதிகளவு சேதமடைந்துள்ளன. இந்தச் சேதங்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மை, வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

மத்தியக் குழுவினா் ஆய்வு: இதனிடையே, புரெவி புயல் பாதிப்புகள் தொடா்பாக டெல்டா, தென் மாவட்டங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா். திங்கள்கிழமையன்று மதுரை வந்த மத்தியக் குழுவினா், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூா் மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. புதன்கிழமையன்று நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு, திருச்சியில் இருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறது மத்தியக் குழு.

மத்தியக் குழு ஒருபுறம் ஆய்வினைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் வேளாண்மை, வருவாய்த் துறை அதிகாரிகளின் கணக்கெடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நான்கு நாள்களுக்குள் இந்த ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.

சேத பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு அடங்கிய ஆய்வறிக்கை நான்கு நாள்களில் சமா்ப்பிக்கப்படும் என சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை செயலாளா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா். இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com