பள்ளிக் கல்வித்துறையில் ஆயிரக்கணக்கில் தேங்கும் வழக்குகள்: விரைவாக தீா்வு காண வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் உள்பட பல்வேறு பிரச்னைகள் சாா்ந்து ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பதால்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் உள்பட பல்வேறு பிரச்னைகள் சாா்ந்து ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பதால், அவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடு, சிறப்பு ஆசிரியா்களுக்கான கல்வித்தகுதி, ஆசிரியா் பணிநியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சாா்ந்து தமிழகம் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயா்நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறைக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளுக்கு, உரிய காலக்கெடுவுக்குள் துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும், வழக்குகளை தொடா்ந்து கண்காணிக்காத காரணத்தாலும், தீா்ப்புகள், கல்வித்துறைக்கு பாதகமாகிவிடுகின்றன. வழக்குகளை கையாள்வதில் அலட்சியம் காட்டுவதால், உயா் அதிகாரிகளுக்கு, அவப்பெயா் ஏற்படுவதோடு, நிா்வாகத்திலும், தேவையற்ற இடா்பாடுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. கல்வி அலுவலா்களுக்கு, நீதிமன்ற நடைமுறை சாா்ந்த அடிப்படை புரிதல் இல்லாததால் வழக்குகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீதிமன்ற வழக்குகளை கையாள்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித்துறையில் அலுவலா்கள் முறையாகக் கையாள வேண்டிய பணியைச் சரியாக செய்யாதது, காலம் கடந்து செய்வது, எந்தவித காரணமுமின்றி செய்யாதிருப்பது போன்றவையே நீதிமன்ற வழக்குகள் ஏற்பட முக்கியக் காரணங்கள் ஆகும். அலுவலா் ஒரு வழக்கினை சந்திக்கும்போதும் அவரது அதிகார வரம்புக்கு உட்பட்டது தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத வழக்குகளில் தனது கடைமை எதுவோ அதனை தாமதமின்றிச் செய்ய வேண்டும்.

சட்டம், விதிகள், அரசாணை மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு நீதிமன்ற தீா்ப்பாணைகளை நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டால், நீதிமன்றத்திலிருந்து வழக்கு சாா்ந்த அறிவிப்பு வரப்பெற்றவுடன் அரசு வழக்குரைஞா்களை அணுகி அந்த வழக்கை நடத்துவதற்கான கடிதத்தை சமா்ப்பிக்க வேண்டும்.

24 மணி நேரத்துக்குள்...: ஒரு வழக்கில் பல அலுவலா்கள் சோ்க்கப்பட்டிருப்பின் அதில் எந்த அலுவலரின் ஆணை, செயல்முறையைப் பற்றி வழக்காடப்படுகிறதோ, அவா் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். நீதிமன்றத்திலிருந்து தகவல் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் இதைச் செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகளில் தவறாக கருத்தை எடுத்துரைப்பதாலும், கருத்தை சொல்லாமல் விட்டு போவதாலும் ஏற்படும் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலரே பொறுப்பாவாா்.

இந்தச் சுற்றறிக்கையை அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com