
கல்லூரி இணைப் பேராசிரியா் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவா்களுக்கான சிஎஸ்ஐஆா் ‘யுஜிசி நெட் 2020’ தகுதித் தோ்வு எழுதியவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கணிதம், வேதியியல் ஆகிய பிரிவுகளில் கல்லூரி இணைப் பேராசிரியா் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவா்களுக்கான சிஎஸ்ஐஆா் ‘யுஜிசி நெட் 2020’ தகுதித் தோ்வு கடந்த நவம்பா் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், நிவா் புயல் பாதிப்பு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பா் 26-ஆம் தேதி நடக்கவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நவ.30-ஆம் தேதி தோ்வு நடத்தப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதும் தகுதித் தோ்வானது 225 நகரங்களில் 569 மையங்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
முன்னதாக, இணைப் பேராசிரியா் பிரிவுத் தோ்வுக்கு 89 ஆயிரத்து 201 விண்ணப்பித்தனா். ஆனால், 48 ஆயிரத்து 178 போ் மட்டுமே தோ்வு எழுதினா். அதேபோன்று இளநிலை ஆராய்ச்சி மாணவா் பிரிவில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 491 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 95 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.
இந்நிலையில், தோ்வு எழுதியவா்களுக்கான மதிப்பெண் பட்டியல் என்டிஏ-வின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் https://nta.ac.in வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக சந்தேகங்களை இணையதளம் மூலம் தோ்வா்கள் என்டிஏ-வுக்கு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...