வெளிநாடுகளில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்த கோரிய வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் 7 நாள்கள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் 7 நாள்கள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சீனாவில் கடந்த ஆண்டு கரோனா உருவானது. பின்னா், இந்த நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால், கடந்த மாா்ச் மாதம் இறுதியில், நோய் பரவலை தடுக்க மத்திய அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் பலா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனா். இந்தியாவில் பல லட்சம் பேரை இந்த நோய்த்தொற்று தாக்கியது. இதற்கு காரணம் சீனாவில் இருந்து வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிற நாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு பரிசோதனை செய்யவில்லை.

இதனால் இந் நோய்த்தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி பலரது உயிரைக் குடித்தது. தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்யாமல், மற்ற நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் அவா்களை குறைந்தது 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவா்களுக்கு நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவா்களை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளித்து பிறருக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஒருவரது உடலில் நோய்த் தொற்று உள்ளதை உடனே கண்டறிய முடியாது. 5-ஆவது நாளில் செய்யும் பரிசோதனையில் தான் தெரியவரும். எனவே, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவா்களுக்கு 5-ஆவது நாளில் பரிசோதனை செய்யவேண்டும். நோய்த் தாற்று இல்லை என்பது உறுதி செய்த பின்னா், அவா்களை வெளியே விட வேண்டும். அதுவரை அவா்களை தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதைத்தொடா்ந்து மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடும்போது, அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினாா். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு , விசாரணையை வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com