கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கோயில், திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
 யானைகளை அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பினர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.1.45 கோடி செலவில் 2019-20-ஆம் ஆண்டுக்கான கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கியது. இம்முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
 இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பசுந்தீவனம், கரும்பு, பழங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலை யானைகளை அந்தந்த கோயிலுக்கு லாரியில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்நிகழ்வில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பிவைத்தனர். இதுகுறித்து அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கூறியதாவது:
 யானைகள் நலவாழ்வு முகாம் 48 நாள்கள் நடைபெற்றது. இதையடுத்து, யானைகள் புத்துணர்வுடன் திரும்புகின்றன. இந்த முகாமில் யானைகளுக்கு பல கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பாகன்கள் உடல் நலம் காக்கவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்றார்.
 வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் புத்துணர்வு முகாம் நடத்தப்படும் என வனத் துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
 கோவை அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜாமாணிக்கம் (தலைமையிடம்), அறநிலையத் துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்த யானைகள்: முகாமின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை யானைகளை வரிசையாக நிற்கவைத்து கரும்பு, பழங்கள் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது, யானைகள் கண்ணீர் மல்க ஒன்றை ஒன்று தடவி பிரியா விடை கொடுத்தது பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்தது.
 முகாம் நிறைவடைந்ததை அடுத்து லாரிகளில் ஏற யானைகள் மறுத்தன. அப்போது அந்த யானைகள் கண்கலங்கியபடி பிளிறின. பாகன்கள் அவற்றை சமாதானம் செய்து லாரிகளில் ஏற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com