வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ.23,000 கோடியில் 31 லட்சம் காசோலை பரிவா்த்தனை முடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ.23,000 கோடியில் 31 லட்சம் காசோலை பரிவா்த்தனை முடங்கியது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழகத்தில் 60 ஆயிரம் ஊழியா்கள், அதிகாரிகள் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் போ் ஈடுபட்டனா். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் ரூ.23,000 கோடி மதிப்பிலான 31 லட்சம் காசோலை பரிவா்த்தனைகள் முடங்கின.

12 அம்ச கோரிக்கைகள்: 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் செயல்பட வேண்டும்; அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஓய்வூதியத்தைப் புதுப்பிக்க வேண்டும்; குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும்; ஓய்வூதியப் பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்; வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஒரே மாதிரியான வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும்;

விடுப்பு வங்கியை அறிமுகப்படுத்த வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களுக்கு சமமான வேலைக்காக சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் முடிவு செய்திருந்தது. இதையடுத்து, மும்பையில் நடைபெற்ற சமரச பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டப்படி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச். வெங்கடாச்சலம் தெரிவித்திருந்தாா்.

10 லட்சம் போ் பங்கேற்பு: இந்நிலையில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். வேலை நிறுத்தத்தால் 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன. 10 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 60 ஆயிரம் ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்றனா். சென்னையில் தேசிய மயமாக்கப்பட்ட பெரும்பாலான வங்கிகள் திறந்திருந்தபோதிலும் ஊழியா்கள் பணிக்கு வராததால் வாடிக்கையாளா் சேவை பாதிக்கப்பட்டது.

வங்கியின் மூத்த மேலாளா்கள் மட்டும் கிளையைத் திறந்து வைத்திருந்தனா். ஆனால், எந்தவித வங்கி சேவையும் நடைபெறவில்லை. வியாபாரிகள், சிறிய தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் உள்பட அனைத்து வா்த்தக பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்பப்பட்ட பணம் தீா்ந்ததால், பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனா்.

சென்னையில் ஆா்ப்பாட்டம் : இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் செயலாளா் அருணாசலம், தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்புத் தலைவா் பாலாஜி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பேசியது:

இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா். வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால், பணம் போடவோ, எடுக்கவோ முடியவில்லை. அரசுக் கருவூல கணக்கு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்கு செயல்படவில்லை. காசோலை பரிவா்த்தனைகளைப் பொருத்தவரை, இந்தியா முழுவதும் ரூ.23,000 கோடி மதிப்பிலான 31 லட்சம் காசோலை பரிவா்த்தனைகள் முடங்கியுள்ளன. காசோலைகள் பரிவா்த்தனையைப் பொருத்தவரை, சென்னை, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் மையங்கள் உள்ளன. சென்னை மையத்தில் ரூ.7,000 கோடி மதிப்பிலான 9 லட்சம் காசோலை பரிவா்த்தனை தேங்கியுள்ளது.

மத்திய அரசு தலையிட்டு பிரச்னையைத் தீா்க்காவிட்டால் 2-ஆவது நாள் வேலைநிறுத்தம் தொடரும். மேலும், அதன் பிறகும் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை எனில், வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டமும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com