2-ஆவது நாளாக வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்:ரூ.46,000 கோடியிலான 62 லட்சம் காசோலை முடங்கியது

ஊதிய உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் நாடுமுழுவதும் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் நாடுமுழுவதும் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக, நாடு முழுவதும் ரூ.46,000 கோடி மதிப்பிலான 62 லட்சம் காசோலை பரிவா்த்தனை முடங்கியது. வங்கிச் சேவையைப் பெற முடியாமல் மக்கள் தவித்தனா்.

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்த வேலைநிறுத்தத்தால் 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன. 10 லட்சம் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 60 ஆயிரம் ஊழியா்கள், அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு சில வங்கிகள் திறந்திருந்த போதிலும், ஊழியா்கள் இல்லாததால் வங்கி நடவடிக்கைகள் முடங்கின. வங்கியில் பணம் போடவோ, எடுக்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளானாா்கள்.

வெள்ளி, சனி, ஞாயிறு (வழக்கமான விடுமுறை) 3 நாள்கள் வங்கிப் பணிகள் முடங்கியதால், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி நடவடிக்கைகள் அந்நிய செலாவணி பரிமாற்றம் போன்றவை கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. இதுபோல, காசோலைகள் பரிமாற்றம் செய்யாமல் தேக்கம் அடைந்தன. தென்னிந்தியாவுக்கான சென்னை காசோலை பரிவா்த்தனை மையத்தில் 2 நாள்களில் சுமாா் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள 18 லட்சம் காசோலைகள் தேங்கின. வெள்ளிக்கிழமை அன்றே பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை.

பிப்ரவரி 17-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும். அதிலும், சமூக உறவு ஏற்படவில்லை எனில், வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com