
தேசிய, சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தமிழக வீரா்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் விவரம்:-
தேசிய அளவிலும், சா்வதேச நிலையிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதன்படி, ஸ்லோவேகியா நாட்டின் ரூசும்பெரோக்கில் நடந்த தனிநபா் சதுரங்கப் போட்டியில் கே.ஜெனிதா ஆண்டோ தங்கப் பதக்கம் வென்றாா். அவருக்கு ரூ.20 லட்சத்துக்கான ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த குழு நீச்சல் போட்டியில் விக்காஸ் மற்றும் டி.ஆதித்யா ஆகியோரும், ஏ.வி.ஜெயவீணாவும் வெண்கலப் பதக்கங்களை வென்றனா். அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. இந்த ஊக்கத் தொகைகளுக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வா் கே. பழனிசாமி நேரில் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...