சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை: ரஜினிகாந்த்

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை: ரஜினிகாந்த்

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில்,

2010இல் காங்கிரஸ் அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை ஏற்படுத்திவிட்டது. எனவே நாட்டு மக்களை அடையாளம் காணும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமானது. இதில் யாருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.

குடியுரிமைத் திருத்த சட்டத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது. எனவே இதனால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படப்போவதில்லை. இதர நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியக் குடியரிமை வழங்குவது தொடர்பான நடைமுறையாகவே அமைந்துள்ளது. 

ஆனால், ஒருவேளை இதனால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினையின் போதும் இந்தியாவை தனது தாய்நாடாக ஏற்றுக்கொண்டு இருக்க முன்வந்த இந்திய இஸ்லாமியர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முதல் ஆளாக நான் போரடுவேன். இதில் சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டுகிறது, இதற்கு அந்த மதகுரு சிலரும் துணைபோகிறார்கள். இது மிகவும் தவறானது. 

மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன் தங்களுடைய ஆசிரியர்கள், முன்னோர்களிடம் தீர கலந்து ஆலோசித்த பின்னர் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் அரசியல்வாதிகள் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். முழு விவரம் அறியாமல் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதனால் சோழர் காலம் முதல் இலங்கையில் உள்ள தமிழர்களை தொந்தரவு செய்யக்கூடாது.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை. அதில் எனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளேன். நான் முறையாக வரி செலுத்தி வருகிறேன். சட்டவிரோதமாக இதுவரை எந்த காரியத்தையும் செய்ததில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com