டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்கள்


சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் செய்வதைத் தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயம், தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களைத் தேர்வு செய்தல், தேர்வானர்களின் முழு விவரங்களும் இணையதளத்தில் வெளியிடுவது உள்ளிட்ட 6 முக்கிய சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இந்த புதிய 6 சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட உள்ளன.

அதாவது, 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயமாக்கப்படும்.

தேர்வு குறித்து அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு தேர்வர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை தேர்வர்கள் உடனடியாகப் பெறும் வாய்ப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இணையவழியில் தேர்வுக்கு விண்ணப்பித்தலின்போது 3 மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வெழுதும் மையங்களை தேர்வர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் டிஎன்பிஎஸ்சியே ஒதுக்கும்.

நிரப்பப்பட்ட இடங்கள், கலியிடங்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வின் போது, தேர்வர்களின் கை ரேகை, ஆதார் ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்து உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்கும் விதமாக, உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில், முறைகேடுகளைத் தடுக்க மேற்கண்ட 6 புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com