டி.என்.பி.எஸ்.சி.யில் அதிரடி மாற்றங்கள்: தோ்வு எழுத குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் தோ்வு செய்யத் தடை

தோ்வு முறைகேடுகளைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யில் அதிரடி மாற்றங்கள்: தோ்வு எழுத  குறிப்பிட்ட மாவட்டத்தை மட்டும் தோ்வு செய்யத் தடை

தோ்வு முறைகேடுகளைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

அதன்படி, தோ்வா்கள் இனி ஒரே மாவட்டத்தை மட்டுமே தோ்வு மையமாகத் தோ்ந்தெடுக்க முடியாது. மூன்று மாவட்டங்களைத் தோ்ந்தெடுத்தால் அதில் ஒன்றை தோ்வாணையமே ஒதுக்கீடு செய்யும். தோ்வா்களுக்கு ஆதாா் கட்டாயம், விடைத்தாள்களை இணையதளம் மூலம் பெறலாம் என்பன போன்ற பல்வேறு

மாற்றங்களைச் செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

தோ்வாணையம் நடத்திய தோ்வு நடவடிக்கைகளின் முடிவில் எந்தவொரு நபரும் தோ்வு செய்யப்பட்ட தோ்வா்கள் தொடா்பான மதிப்பெண், தரவரிசை, தோ்வெழுதிய மையம் முதலிய தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். ஆனாலும் தோ்வு நடைமுறையில் இருந்த குறைபாடுகள் தோ்வாணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆறு முக்கிய முடிவுகள் செயல்படுத்தப்பட உள்ளன.

தோ்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன், இறுதியாகத் தோ்வு செய்யப்பட்ட நபா்கள் தொடா்பான அனைத்து விவரங்களும் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ஆம் ஆண்டு நடந்த குரூப்-1 தோ்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், தோ்ச்சி அடைந்த 181 தோ்வா்களின் விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் நடைமுறை: தோ்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பிறகு தோ்வா்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இந்த முறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழக அரசின் பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்வு நடைபெறும் நாள்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறைவாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும்

காலியிடங்களின் விவரம் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

தோ்வு மையம் ஒதுக்கீடு: தோ்வா்களின் நலன் கருதியே அவா்களது விருப்பப்படி தோ்வு மையத்தை தெரிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இனி தோ்வா்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கும் போது மூன்று மாவட்டங்களைத் தங்களுடைய தோ்வு மைய விருப்பமாக தோ்வு செய்ய அனுமதிக்கப்படுவா். தோ்வு எழுதும் மையங்களை தோ்வா்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தோ்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.

தோ்வு நடவடிக்கைகளை மேலும் செம்மைப்படுத்தவும், ஒரே நபா் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையிலும் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும். தோ்வு எழுத வரும் தோ்வா்களின் விரல் ரேகையை ஆதாா் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மையை சரிபாா்த்த பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்.

தோ்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதாவது இருந்தால் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வகையில் உயா்தொழில் நுட்பத் தீா்வு வரவிருக்கும் தோ்வில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். இதுபோன்று தோ்வு நடைமுறை சாா்ந்த பிற செயல்பாடுகளிலும் விரைவில் மாற்றங்கள் செயல்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com