தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவரின் தாய் சாவு: முஸ்லீம் இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு

துறையூர் அருகே தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த  ஒருவரின் தாய் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை முஸ்லீம்களுக்கு உரிய பொதுவான இடுகாட்டில் புதைக்க ஒரு தரப்பு முஸ்லீம் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு
முஸ்லீம் இடுகாட்டிற்கு பூட்டு
முஸ்லீம் இடுகாட்டிற்கு பூட்டு

துறையூர்: துறையூர் அருகே தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த  ஒருவரின் தாய் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை முஸ்லீம்களுக்கு உரிய பொதுவான இடுகாட்டில் புதைக்க ஒரு தரப்பு முஸ்லீம் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சிக்குட்பட்டது சித்திரப்பட்டி கிராமம்.  இங்கு 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் உள்ளது. இவர்களில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஊரில் உள்ள  அல்ஹிதாயா சுன்னத்துல் பள்ளிவாசல் மதகுரு சொல்கிறபடி மரபு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். மீதமுள்ள 40 குடும்பங்கள் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சார்ந்து அந்த அமைப்பில் கூறப்படும் வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புச் சார்ந்தவர்கள் தங்களுக்கென பள்ளிவாசல் அந்த பகுதியில் பிறிதொரு இடத்தில் அமைத்துக் கொண்டனர். ஆனால் உயிரிழந்த முஸ்லீம் சடலத்தை அடக்கம் செய்ய சித்தரப்பட்டியில் பொதுவாக முஸ்லீம் இடுகாடு உள்ளது.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் யாராவது உயிரிழந்தால் அந்த சடலத்தை மஸ்ஜித் மஹ்மூர் பள்ளிவாசல் மரபு படி இறுதிச்சடங்கு செய்தால் தான் முஸ்லீம்களுக்கான பொது இடுகாட்டில் புதைக்கவேண்டும் என்று மஸ்ஜித் மஹ்மூர் பள்ளிவாசல் நிர்வாகம் கூறியதால் 2017 முதல் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவுகிறது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின் பிறந்து 10 நாளான குழந்தை இறந்த போது எதிர்ப்பு எழுந்ததால் அவர் தனது வீட்டிலேயே குழந்தையின் சடலத்தை புதைத்தார். இதனையடுத்து பாத்திமா என்பவர் இறந்த போதும், மஸ்ஜித் மஹ்மூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின்  தலைவராக இருந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு மாறிய முகமது யாகியா இறந்த போதும்,  அவரை அடுத்து அவருடைய மனைவி ஆமினா பீபி இறந்த போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினையையடுத்து அந்த மூன்று பேரின் சடலமும்  பொது முஸ்லீம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டதாம்.

இந்த நிலையில் தவ்ஹீத் ஜமாத்தை தழுவும் சித்திரப்பட்டி அப்துல் ரசாக் மகன் சபியுல்லாவின் தாய் சாராபீ(85) மரணத்தை எதிர் நோக்கியிருந்ததார். இதனால் கடந்த 5ம் தேதி தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சித்திரப்பட்டி கிளைச் செயலாளர் முகமது ஹனீபா தலைமையிலான முஸ்லீம்கள் நிலைமையை சொல்லி, அந்த அமைப்பினர் முஸ்லீம்களுக்கான பொது இடுகாட்டை பயன்படுத்த மஸ்ஜித் மஹ்மூர் பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபிக்கக்கூடும் என்பதை சுட்டிக் காட்டி பிரச்சினையைத் தீர்த்து தருமாறு வருவாய், காவல் துறைக்கு மனு அளித்தனர்.

இந்த நிலையில் சாராபி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதனையடுத்து பொது இடுகாட்டில் புதைக்க ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் பிரச்சினை எழுந்தது. அந்த பள்ளிவாசலைச் சேர்ந்தவர்கள் பொது இடுகாட்டை கேட்டைப் பூட்டினர். பிரச்சினை பெரிதாகும் என்பதால்  வருவாய் துறை துறையூர் மண்டல துணை வட்டாட்சியர் ஜாபர் சாதிக்கையும், கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதனையும் பேச்சுவார்த்தைக்கு முதலில் அனுப்பினர். அதன்பின்னர் இடுகாட்டில் போடப்பட்ட பூட்டை திறக்கப்பட்டது. ஆயினும் பள்ளிவாசல் தரப்பினர் சடலத்தை தங்கள் பள்ளிவாசலில் வைத்து மரபுபடி இறுதிச் சடங்கு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியதாலும், அதற்கு தவ்ஹீத் ஜமாத் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அகிலா தலைமையில் அமைதி பேச்சு நடைபெற்றது.  இரு தரப்பினர்களும் தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில்

இஸ்லாமியர்களுக்கு பொதுவாகத் தான் அரசு சார்பில் இடுகாட்டுக்கான நிலம் அளிக்கப்பட்டது. வழிபாட்டு முறையில் உள்ள பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ளவேண்டும். சடலத்தை புதைக்கிற விசயத்தில் பாரபட்சம் காட்டவோ, எதிர்ப்புத் தெரிவிக்வோ கூடாது. உயிரிழந்த சாரபீயின் மகன் சபியுல்லா ஜவ்ஹீத் ஜமாத் வழிபாட்டு முறைபடி அடக்கம் செய்ய விரும்புவதால் அவரது விருப்பத்தை யாரும்  ஆட்சேபிக்க முடியாது. இரு தரப்பும் சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கவேண்டும். யார் ஒருவர் பிரச்சினை செய்தாலும் சட்டம் ஒழுங்கு காப்பாற்ற போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று வட்டாட்சியர் அறிவுறுத்தியதையடுத்து அமைதி பேச்சு முடிவுக்கு வந்தது.

மதியம் ஒரு மணியிலிருந்து மாலை 5 மணி வரை முடிவு பெறாமல் நடைபெற்ற அமைதிப் பேச்சில் திமுகவைச் சேர்ந்த திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மஸ்ஜித் மர்மூர் பள்ளிவாசல் தரப்புக்கு ஆதரவாக அமைதிப் பேச்சில் பங்கேற்று பேசினார். அதனை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஏற்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த தன்ராஜ் பேசினார். இந்த நிலையில் அதிகாரிகள் தரப்பு யாருக்கு ஆதரவாக பேசுவது என்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. முடிவில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர்கள் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு அமைதிப்பேச்சு முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசியில் கட்சியினர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று விசாரித்த போது

பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தங்கள் பள்ளிவாசலுக்கு வழிபாட்டுக்கு வருகிற முஸ்லீம்களுக்கு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஆதரிக்கும்படி வெளிப்படையாக ஆதரவு திரட்டுவதால் திமுக ஒரு தரப்பினருக்கு விசுவாசம் காட்டியதாம். அதற்கு போட்டியாக விசுவாசம் அதிமுக சார்பில் காட்டுகிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com