சேலம் கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி: ராகுல் டிராவிட் பங்கேற்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) திறந்து வைத்தார்.
சேலம் கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி: ராகுல் டிராவிட் பங்கேற்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலைப்பட்டி கிராமத்தில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) திறந்து வைத்தார்.

இந்த புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாதெமி இயக்குநருமான ராகுல் டிராவிட், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மின்சாரம், மதுவிலக்கு-ஆயத்தீா்வைத் துறை தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஆண்டுகளிலிருந்து ஜி.எஸ்.கே மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என ஐ.சி.சி.கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஸ்ரீனிவாசன் உறுதியளித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழக இளைஞர்கள் மிகுந்த திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் தமிழக அணி மட்டுமல்லாது இந்திய அணியிலும் இடம் பெறும் வகையில் பயிற்சி பெறுவதற்கு இந்த மையம் ஏதுவாக அமையும். இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என தெரிவித்தார்.

இதில் ராகுல் டிராவிட் பேசியதாவது,

சேலத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன். சேலம், கோவை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் கட்டமைப்பை ஏற்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும், மைதானத்தை கட்டமைக்க உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

ஏனென்றால் இனி வரும் காலங்களில் இதுபோன்று புறநகர்ப் பகுதிகளில் இருந்து தான் அதிகளவிலான திறமையான கிரிக்கெட் ஹீரோக்கள் உருவாக உள்ளனர். இதுபோன்று மைதானங்கள் உருவாவதால், அதிகளவிலான இளைஞர்களுக்கு விளையாட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் வலுக்கிறது. விளையாட்டின் மூலம் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.

ஒருநாள் நானும் இங்கு கிரிக்கெட் விளையாடலாம், அதில் எனக்கும் ஆசைதான். ஆனால், எனக்கு வயதாகிவிட்டதால் அதற்கு சாத்தியமில்லை. எனவே இளம் அணிக்கு பயிற்சியளித்து அவர்களை இங்கு நிச்சயம் விளையாட வைப்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com