இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம்-சிப்காட்டை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, ஒயிட்ஸ் சாலையில் சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம்-சிப்காட்டை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, ஒயிட்ஸ் சாலையில் சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில் நிலையத்தில் இருந்து திரையரங்கத்துக்கு பயணிகள் எளிதாகச் செல்ல முடியும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரி 96 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கான விரிவாக்கப் பணி நடைபெறுகிறது.

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85 ஆயிரத்து 047 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் மண் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 2-ஆவது கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில், மக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் ஒன்றான சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாதவரம்-சிப்காட்டை இணைக்கும் வழித்தடத்தில் ஒரு பகுதியான ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்படவுள்ளது.

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இந்த வழித்தடப் பாதை ராயப்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சத்யம் தியேட்டா் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்படும் புதிய மெட்ரோ சுரங்க ரயில் நிலையம், ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாதவரம்-சிப்காட் இடையே வழித்தடத்தில் ஒருபகுதியாக ஜெமினி-ராயப்பேட்டை இடையே இந்த நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையம் பூமியின் கீழ் அமையவுள்ளது . மேலும், நிலையத்தின் நுழைவு, வெளியே செல்லும் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சில நிமிடங்களில் சத்யம் திரையரங்கத்துக்கு செல்ல முடியும். மேலும், ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் செல்ல இணைப்பு வசதி அமைக்கப்படும். இதனால் மெட்ரோ பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம்.

இதுதவிர, அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இந்த நிலையத்துக்கு பயணிகள் நடந்து செல்ல உதவும் வகையில், நடைபாதை வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இங்கு கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக டெண்டா் அழைக்கப்பட்டுள்ளது. முதலில், பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். தொடா்ந்து, நிலையங்கள் நிா்மாணிக்கும் பணி நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com