காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தலைவா்கள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: தலைவா்கள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் (பாமக): காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு மூலம், அந்த மாவட்ட விவசாயிகளுக்கு கிடைத்துள்ள நன்மைகள் ஏராளமானவை. இந்த அறிவிப்பின் மூலம் காவிரிப் பாசன மாவட்ட உழவர்களின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளன.
டாக்டர் கே.பி.ராமலிங்கம் (தமிழ்நாடு இயற்கை நீர் வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவர்,  முன்னாள் மாநிலங்களவை திமுக உறுப்பினர்) :   தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை முழு மனதோடு நாங்கள் வரவேற்கிறோம். 
விவசாய சங்கங்கள்,  இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் உள்ள 56 சங்கங்களின் சார்பில், அவருடைய அறிவிப்பை  வரவேற்கிறோம். அதே நேரத்தில், இந்த திட்டம் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாமல், இதற்கு முழுமையான அதிகாரம் படைத்த மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். 
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது என்பது மத்திய அரசின் ஆளுமையின்கீழ் வருகிறது.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போதுதான் முதல் முறையாக, ஒரு மாநில முதல்வர் ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
  தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால்,  வருகிற 11-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று,  சட்ட வரையறையை மத்திய அரசு கொண்டுவர, மாநில அரசின் சார்பில் உடனடியாக மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.  இதற்கு தமிழக விவசாய சங்கங்கள் அனைத்தும் உறுதுணையாக இருப்போம்.  மிக விரைவாக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டத்தைக் கூட்டி, அரசுக்கு ஆதரவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை, வழிவகைகளைக் காண திட்டமிட இருக்கிறோம்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றியாகும். இருந்தபோதும், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
ஜி.கே.வாசன் (தமாகா): முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த விவசாயிகளின் எண்ணங்களை தமிழக அரசு பிரதிபலித்திருக்கிறது. அதிமுக அரசு தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்கும் அரசாக செயல்படுவதை இன்றைய அறிவிப்பும் நிரூபித்திருப்பதால் தமாகா சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி.  தினகரன் (அமமுக): மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆக்குவோம் என்று முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெ.சண்முகம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்): முதல்வர் அறிவிப்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  வருகிற 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணும் வகையில் உரிய சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் என்பதை உணர்ந்து அதற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று அரசே இப்போது அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய பல நூற்றுக்கணக்கானோர் மீது பொய்வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 ரா.சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி),  பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி), சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோரும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com