ரயில்வே அனுமதிக்காக 6 ஆண்டுகளாக காத்திருக்கும் மேம்பாலப் பணி

ரயில்வே அனுமதிக்காக 6 ஆண்டுகளாக காத்திருக்கும் மேம்பாலப் பணி

தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக தாமதம் செய்துவருவதால், இப்பகுதியில்

தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்காமல் கடந்த 6 ஆண்டுகளாக தாமதம் செய்துவருவதால், இப்பகுதியில் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது.
 தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்-45 ஏ) மீளவிட்டான் அருகே ஏற்கெனவே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அருகே புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014 -ஆம் ஆண்டு தொடங்கியது.
 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள இந்தச் சாலையில் ரயில்வே தண்டவாளத்தின் மேல்பகுதியில் புதிதாக பாலம் அமைக்க கடந்த 2014 -ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் முறைப்படி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பாலம் கட்டுவதற்கான அனுமதியை ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை. இதனால், ரயில்வே தண்டவாளம் செல்லும்
 பகுதியை தவிர மற்ற இடங்களில் பாலம் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் முடிந்து, எஞ்சிய பணிகள் கிடப்பில் உள்ளன.
 இந்தச் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பல ஆயிரம் இலகுரக வாகனங்கள் சென்று வருவதால், பாலம் அமைக்கும் பணிகள் முடிவதற்கு முன்பே அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து ஒப்பந்தக்காரர்கள் சுங்கவரி வசூல் செய்து வருகின்றனர்.
 மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள பாலமும் பக்கவாட்டுச் சுவர் தாங்குகின்ற இடங்களில் உள்ள மண் சுவர்கள் அரிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஏறத்தாழ 300 மீட்டர் நீளத்துக்கு ஒரு பிரிவில் சாலையே இல்லாமல் குறுகி காணப்படுகிறது.
 இந்த குறுகலான சாலையில் இருவழியிலும் வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்து நேரிடும் சூழலும் உள்ளது.
 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: கடந்த ஜனவரி 17 -ஆம் தேதி இந்த இடத்தில் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே பகுதியில், கார் கவிழ்ந்து மேம்பாலத்தின் கீழ் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இந்த இடத்தில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
 எனவே, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் வரை புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், விபத்து நேரிடுவதை தடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 இதுதொடர்பாக கடந்த 2018 -இல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், சாலைப் பணிகள் முழுமையாக முடியும் வரை சுங்கச்சாவடியில் பாதிக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓர் ஆண்டுக்குள் பாலம் அமைக்கும் பணியை முடித்துவிடுவதாக நீதிமன்றத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம் உறுதியளித்ததால், தற்போது முழுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாலம் அமைக்கும் பணியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 இதுகுறித்து, தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தொடர் விபத்துகளுக்கு காரணமான பகுதியில் மேம்பாலம் அமைத்து முடிக்கும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அந்த இடத்தில் இனி விபத்து நேராத வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம் என்றார்.
 தூத்துக்குடி மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்பவர் சங்கர் கூறியது:
 மீளவிட்டான் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய அனுமதி வழங்க வேண்டும். மேம்பாலப் பணிகள் முடியும் வரை புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை தடைசெய்ய வேண்டும்.
 அடிக்கடி விபத்து நேரிடும் அந்தப் பகுதியில் தடுப்புச்சுவர், மின்விளக்குகள், ஒளி பிரதிபலிப்பான், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் சாலை சரியாக இல்லை என்ற அறிவிப்பு பலகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், விபத்து நேரக்கூடிய இடத்தில் அது விபத்துப் பகுதி என்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளன. மேம்பாலம் அமைப்பதற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
 6 ஆண்டுகளாக அனுமதி வழங்காமல், தாமதித்து வரும் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய அனுமதியை வழங்காவிட்டால், இந்த இடத்தில் விபத்தால் உயிரிழப்பு தொடர்வதை தவிர்க்க முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 - தி. இன்பராஜ்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com