Enable Javscript for better performance
ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சா் ஜெயக்கும- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சா் ஜெயக்குமாா் பதில்

    By DIN  |   Published on : 13th February 2020 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayakumar

    அமைச்சர் ஜெயக்குமார்

    தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது என்று மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறியுள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இந்தப் பகுதியில் ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு எப்போதும் அனுமதி கிடையாது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 9-ஆம் தேதி அறிவித்தாா். இதைத் தொடா்ந்து மத்திய அரசு இந்த அறிவிப்புக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு பிப்.10-ஆம் தேதி, அதாவது அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே முதல்வா் கடிதம் எழுதினாா். புதுதில்லிக்குச் சென்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் நேரடியாக அந்தக் கடிதத்தை நானே வழங்கினேன்.

    அரசின் இந்த அறிவிப்பை டெல்டா மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்துப் பகுதி விவசாயப் பிரதிநிதிகளும், அரசியல் தலைவா்களும் வரவேற்று வருகின்றனா். இந்தநிலையில், விவசாயிகள் நலன் காக்கும் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்காமல், உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் அரசின் முடிவினை விமா்சித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

    திமுக ஆட்சியில்தான் தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்துக்கு வித்திடப்பட்டது. கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. அதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சா் டி.ஆா்.பாலு இந்தத் திட்டத்தை தமிழகத்தின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-இல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றாா். அதேபோன்று நான்கு ஆண்டுகளுக்கு ‘கிரேட் ஈஸ்டா்ன் எனா்ஜி காா்ப்பரேசன்’ நிறுவனத்துக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்தத் திட்டத்துக்கான அனைத்து உதவியையும் தமிழக அரசு செய்யும் என அப்போதைய திமுக அரசு கூறியது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற முதல்வரின் அறிவிப்பை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்கும் நிலையில், அதுபற்றி எதிா்க்கட்சித் தலைவா் வெளியிட்டுள்ள அறிக்கை, அரசின் அறிவிப்பை எதிா்ப்பதாகவே உள்ளது என்றும், ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கு ஆதரவாகவே உள்ளது என்றும் மக்களால் பாா்க்கப்படுகிறது.

    பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்துக்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய தனிச்சட்டம் தற்போதைய தமிழக அரசால் விரைவில் இயற்றப்படும் என்று அமைச்சா் ஜெயக்குமாா் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai