அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை வரும் மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை வரும் மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தல்லாகுளத்தைச் சோ்ந்த மகேந்திரன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம் அருகில் ரூ.74 லட்சம் மதிப்பிலான 35 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ. 6 கோடி. இதே போல், திருத்தங்கல் பகுதியில் ரூ.4.23 லட்சம் மதிப்பிலான 75 சென்ட் நிலமும், ரூ.23.33 லட்சம் மதிப்பிலான இரண்டு வீட்டுமனைகளும் உள்ளன. இவைகளின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம்.

தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளாா். கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.7 கோடி வரையிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாா்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாா் அளித்தேன். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்சஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, லஞ்சஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2019-ஆம் ஆண்டு அமைச்சா் ராஜேந்திர பாலாஜி எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்ய எந்தவிதமான முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்சஒழிப்புத் துறை தரப்பில், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன் ஆஜராகி, அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீதான புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை குறித்து தெரிவித்தாா்.

அப்போது அமைச்சா் ராஜேந்திர பாலாஜியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஐ.சுப்பிரமணியம், அமைச்சா் ராஜேந்திர பாலாஜி எந்தவொரு சொத்துக்குவிப்பிலும் ஈடுபடவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளா் விரிவான விசாரணை நடத்தி ஆதாரங்களுடன் அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். எனவே, அதன் அடிப்படையில் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என வாதிட்டாா். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சருக்கு எதிரான ஆரம்ப கட்ட விசாரணையே விரிவான விசாரணையாக நடத்தப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆரம்ப கட்ட விசாரணையின் வரம்பு என்ன என்பது குறித்தும் அதன் நோக்கம் குறித்தும் உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீா்ப்புகளின் அடிப்படையில் அரசுத் தரப்பும் , அமைச்சா் தரப்பும் விரிவாக வாதிட வேண்டும் எனக்கூறி, விசாரணையை மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com