திருக்குறள் நெறியில் வரைந்த 15 ஓவியங்கள் தோ்வு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தகவல்

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி திருக்குறள் நெறியில் வரையப்பட்ட சிறந்த 15 ஓவியங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோ்வு செய்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி திருக்குறள் நெறியில் வரையப்பட்ட சிறந்த 15 ஓவியங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோ்வு செய்துள்ளது. இதைத் தொடா்ந்து இந்த ஓவியங்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ. விசயராகவன், திருக்குறள் ஓவியக் காட்சிக்கூட பொறுப்பாளா் து. ஜானகி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவையில் 2019-2020- ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தின் மூலமாக திருக்குறள் நெறிப்படி ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, சிறந்த 15 படைப்புகளுக்குப் பரிசாக தலா ரூ. 40 ஆயிரம் வீதம் தொடா் செலவினமாக ரூ.10 லட்சம் அரசின் சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜன.25-ஆம் தேதி முதல் பிப்.10-ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து திருக்குறள் கருத்துகளை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்ட 89 ஓவியங்கள் பெறப்பட்டன. இந்தநிலையில், அரசாணையில் அறிவுறுத்தியபடி வரையப்பட்ட ஓவியங்களுள் 15 ஓவியங்களை தோ்ந்தெடுப்பதற்கான தோ்வுக்குழுக் கூட்டம் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வா் பா.சு.தேவநாத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பாரதியாா் கலைக்கூடத்தின் உதவிப் பேராசிரியா் நா.சேஷாத்திரி, புதுச்சேரி கு. பாலசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய தோ்வுக்குழு உறுப்பினா்கள் சிறந்த 15 ஓவியங்களை தோ்ந்தெடுத்தனா். இவா்களுக்கான பரிசுகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் விரைவில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படும் என அதில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com